பொதுமக்களே அடித்துக் கொல்வது ஏன்?

நெட்டிசன்:

சமூகஆர்வலர் பாரதி சுப்பராயன் அவர்களது முகநூல் பதிவு:

மீபத்தில், பிள்ளை பிடிக்கும் கும்பல் என்று தவறுதலாக எண்ணி, ஒரு பெண்ணை ஊர்கூடி அடித்துக் கொன்று விட்டனர் என்று செய்தி படித்தேன். வருந்தினேன்.

ஒரு திருடனோ பிக்பாக்கெட்டோ மாட்டினால் கூட அவனை போலீசிடம் ஒப்படைக்காமல் கரண்ட் கம்பத்தில் கட்டி வைப்பதும் அவனை வருவோர் போவோர் எல்லாம் அடிப்பதும் ஒரு வழக்கமாகவே பல இடங்களில் பின்பற்றப்படுகிறது. திருடன் பெரும்பாலும் குற்றுயிரும் குலையுயிருமாகவே போலீசிடம் ஒப்படைக்கப்படுவான். சில சமயம் இறந்துவிடுவதும் உண்டு.

இச்சம்பவங்களை வெறுமனே கண்டிக்காமல் இதன் பின் இருக்கும் காரணங்களைப் புரிந்து கொண்டால் தான் இதைத் தவிர்க்கும் அடுத்த நகர்வுக்கு செல்ல முடியும் என்று நம்புகிறேன்.

பொதுமக்கள் இப்படி நடந்துகொள்வதற்க்கு இரண்டு காரணங்கள் உள்ளதாக நம்புகிறேன்.

முதல் காரணம் உளவியல் சார்ந்தது. மனித மனதுக்குள் இயல்பிலேயே ஒரு வன்முறை உண்டு. சமூக காரணங்களுக்காக அது அடங்கிக் கிடக்கிறது. இது போன்ற திருடன் மாட்டினால் அந்த உள்ளிருக்கும் வன்முறையை வெளிப்படுத்த தனக்கு ஒரு லைசன்ஸ் கிடைத்ததாக நம்புகிறான். அதனால் தான் அந்தத் திருட்டில் பாதிக்கப்படாதவன் கூட அடிக்கிறான்.

இரண்டாவது காரணம் சட்ட நடைமுறை சார்ந்தது. பொதுமக்களுக்கு போலீஸ் மேல் உள்ள நம்பிக்கை போய்விட்டது. அதிகாரத்திற்க்கும் லஞ்சத்திற்கும் மடிந்து, திட்டமிட்டு குற்றவாளிகளை போலீசார் தப்பவிடுகின்றனர் என மக்கள் நினைக்கின்றனர். திருடனை போலீஸில் ஒப்படைத்தால் ஒரே நாளில் அவன் லஞ்சம் கொடுத்து வெளிவந்து விடுவான் அதனால் அவனை நாமே தண்டிப்போம் என்ற எண்ணம் வன்முறைக்கான இன்னொரு காரணம்.

இதில் உண்மை இல்லாமலும் இல்லை. உதாரணத்திற்கு, எஸ்.வி.சேகரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் தலைமறைவு என்று சொன்னார்கள். ஆனால் அவரோ திருப்பதி கோவில், மத்திய அமைச்சர் விழா என்று போலீஸின் மூக்குக்குக் கீழேயே சுற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் போலீஸ் கைது செய்ய மாட்டேன் என்கிறது. இந்த சூழ்நிலையில், சேகர், பொதுமக்கள் கையில் சிக்கினால், உதைப்பார்களா இல்லை போலீசில் ஒப்படைப்பார்களா?