கோவை,

ரசின் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினால்தானே, அரசை பாராட்ட முடியும் என்று அதிரடி கருத்தை கூறி அதிர வைத்துள்ளார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு  நேற்று கோவை வந்த ஆளுநர் பன்வாரிலால், அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், அதிகாரிகளை அழைத்து பேசினார். அதிகாரிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து ஆய்வு மேற்கொண்டார்.

சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில், கோவை மாவட்டத்தில் செய்துள்ள வளர்ச்சி பணிகள் தற்போது செய்து வரும் பணிகள், இனிமேல் செய்ய உள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் தனித்தனியாக கேட்டறிந்தார்.

இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக விவாதம் நடைபெற்றது. அரசியல் கட்சியினர் ஆளுநரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.  புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி போல தமிழக ஆளுநர் பன்வாரிலாலும்  செயல்பட முடிவு செய்துவிட்டார் என விமர்சனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக கோவையில் ஆய்வு பணியை தொடங்கி கவர்னர், கோவை காந்தி புரம் பஸ் நிலையத்தில் உள்ள கழிவறையை ஆய்வு செய்தார்.  மேலும், துடைப்பத்துடன் குப்பைகளை அள்ளி தூய்மைப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியின் போது உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் உடன் இருந்தார்.

அதைத்தொடர்ந்து தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, தென்னிந்தியாவின் மான்செஸ்டரான  கொங்கு தமிழுடன் கோவை நகரம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இந்த நகரம் மேலும் வளர்ச்சி அடையும் என்றும் பேசிய கவர்னர், அகமும் புறமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதையே அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன என்றார்.

தூய்மை இந்தியா திட்டத்தை குடிசைப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றவர் “களத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினால்தானே அரசை பாராட்ட முடியும்” என்று பன்வாரிலால் கூறினார்.

மேலும் மற்ற மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு பணிகள் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார்.

தமிழகத்தில் இதுவரை  எந்த ஆளுநரும் அரசு அதிகாரிகளை நேரடியாக அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தியதில்லை என்று கூறப்படுகிறது.