நீட்’ தேர்வில் மாறுபட்ட வினாத்தாள் ஏன்? விளக்கம் கேட்கிறது மத்திய அரசு

பெங்களூரு:

‘ஹிந்தி, ஆங்கில நீட் வினாத்தாள்களை விட, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில், வினாத்தாள் கடினமாக இருந்ததாக புகார் எழுந்திருப்பதால், அது குறித்து, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது,” என்று, மத்திய அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான, பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, நாடு முழுவதும் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்தத் தேர்வு , ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், பெங்காலி, மராத்தி உட்பட, 10 மொழிகளில்  நடந்தது. இதில், ஹிந்தி, ஆங்கில வினாத்தாளிலிருந்து, மற்ற மொழி வினாத்தாள் மாறுபட்டு இருப்பதாக புகார் எழுந்தது. குறிப்பாக, பெங்காலி வினாத்தாள் மிகக் கடினமாக இருந்ததாக, மாணவ, மாணவியர் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று நடந்த  ஒரு விழாவில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பிரகாஷ் ஜாவடேகர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

பிரகாஷ் ஜாவடேகர்

“ஏற்கனவே நடந்த நீட் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, சமீபத்தில் நடந்த தேர்வுக்கு, உடை விஷயத்தில், கடினமான விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன.  இதில், ஒரு சில மாணவ, மாணவியருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது; கேரளாவில் ஒரு மாணவிக்கு நடந்த கெடுபிடி குறித்து, சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக, நான்கு ஆசிரியர்கள்,  பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஹிந்தி, ஆங்கில வினாத்தாள்களை விட, மற்ற மாநில மொழி வினாத்தாள் மாறுபட்டு இருந்ததாகவும் புகார் கூறப்பட்டிருக்கிறது.  இந்த பிரச்னைக்கு என்ன காரணம் என, விளக்கம் அளிக்கும்படி, சி.பி.எஸ்.இ.,யிடம் மத்திய அரசு கேட்டுள்ளது. விளக்கம் அளிக்கப்பட்டதும், அது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் பேசினார்.