அரசு ஊழியர்களுக்கு தொழிலாளர் தின விடுமுறை எதற்கு? : திரிபுரா முதல்வர் கேள்வி

--

கர்தலா

ரசு ஊழியர்களுக்கு எதற்கு தொழிலாளர் தினம் என அழைக்கப்படும் மே தின விடுமுறை என திரிபுரா முதல்வர் கேட்டுள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் கடந்த 1978 ஆம் வருடம் முதல் மே தின விடுமுறை அப்போதைய முதல்வரான காலம் சென்ற நிருபன் சக்ரவர்த்தியால் அளிக்கப்பட்டது. அந்த விடுமுறை ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் திரிபுராவை ஆளும் பாஜக முதல்வர் பிப்லாப் தேப் இந்த வருட அரசு விடுமுறை பட்டியலை கடந்த 3 ஆம் தேதி வெளியிட்டுள்ள்ளார்.

அதில் மே தினம் என்னும் தொழிலாளர் தினம் கட்டாய விடுமுறையில் இருந்து விருப்ப விடுமுறையாக மாற்றப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு அவ்ர்கள் விரும்பினால் நான்கு தினங்கள் விருப்ப விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என ஒரு பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்த பட்டியலில் உள்ள 12 தினங்களில் மே தினமும் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடந்த அரசு அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப், “உங்களைப் போன்ற அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தொழிலாளர்களா? இல்லை. நான் ஒரு தொழிலாளியா? இல்லை. முதல்வர். அப்படி இருக்க உங்களுக்கு எதற்கு தொழிலாளர் தின விடுமுறை?

இந்த மே தின விடுமுறை என்பது பற்றி நான் இப்போது கூறுகிறேன். இது வரை நான் எங்கும்ம் மேதினத்துக்கு விடுமுறை அளிப்பதை கண்டதில்லை. ஒரு சில மாநிலங்களில் மட்டுமே விடுமுறை அளிக்கின்றனர். விடுமுறக்கான தேவை என்ன எனவே தெரியாத இடது சாரிகள் இந்த விடுமுறையை அறிவித்துள்ளனர்.

அது சரி எனவே வைத்துக் கொண்டாலும் அரசு ஊழியர்கள் தொழிலாளிகளா? இந்த விடுமுறை அவர்களுக்கு எதற்கு வழங்க வேண்டும். ஆயினும் நான் இந்த விடுமுறையை ரத்து செய்யவில்லை. விரும்புபவர்கள் அந்த தினத்தில் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளேன்” என கூறி உள்ளார்.