அன்று மறுத்த மத்திய சுகாதார அமைச்சகம் இன்று ஒப்புக்கொண்டதேன்?

புதுடெல்லி: இந்தியாவில் அலோபதி மருத்துவராக பயிற்சி செய்வோரில் 57.3% பேருக்கு முறையான கல்வித் தகுதியே கிடையாது என்று WHO அமைப்பு கடந்த 2016ம் ஆண்டு அளித்த அறிக்கையை, 2018ம் ஆண்டு நிராகரித்த மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது உண்மை என்று ஒப்புக்கொண்டுள்ளது .

கடந்த 2016ம் ஆண்டு WHO அமைப்பின் அறிக்கை வெளியானபோது, பலருக்கும் பேரதர்ச்சியாக இருந்தது. ஆனால், அப்போது மத்திய சுகாதார அமைச்சராக இருந்த ஜே.பி.நட்டா இந்த அறிக்கை தவறானது என்று கூறி அதை நிராகரித்தார்.

கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆனால், எந்தப் புள்ளிவிபரம் தவறானது என்று மத்திய சுகாதார அமைச்சகம் நிராகரித்ததோ, அதே புள்ளி விபரத்தை தற்போது உண்மை என்று ஏற்றுக்கொண்டுள்ளது. தேசிய மெடிக்கல் கமிஷன் சட்டத்தில், சமூக சுகாதாரப் பணியாளர்களை உள்நுழைப்பது தொடர்பான விவாதத்தில் அரசு இந்த விஷயத்தை ஒப்புக்கொண்டது.

கடந்த 2001ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான WHO அமைப்பின் அறிக்கையில், ஆங்கில மருத்துவத்தைப் பயிற்சி செய்யும் நபர்களில், 31% பேரின் கல்வித் தகுதி 12ம் வகுப்பு மட்டுமே என்று கூறப்பட்டிருந்தது.