ஒரு பக்கம் ஊரடங்கு – மறுபக்கம் ரூ.12000 கோடிக்கு நெடுஞ்சாலைத் துறை டெண்டர்!

சென்னை: கொரோனா ஊரடங்கு மற்றும் பொருளாதார முடக்கம் ஆகியவற்றுக்கு மத்தியில், அவசர அவசரமாக ரூ.12000 கோடிக்கு நெடுஞ்சாலைத் துறை டெண்டர் விடப்பட்டுள்ளதானது சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த 3 மாதங்களாக தமிழ்நாட்டில் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை தொடர்பாக கிட்டத்தட்ட 1000 டெண்டர்கள் ரூ.12000 கோடி மதிப்பில் விடப்பட்டன.

சாலையை அகலப்படுத்துதல், பாலங்கள் கட்டுதல், மேம்பாலம் கட்டுதல் மற்றும் இதர திட்டங்களுக்காக இந்த டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத் துறையால் விடப்பட்ட டெண்டர்கள் குறித்த விபரம், இணையதளத்தில் இன்னும் காணக்கிடைக்கிறது என்று கூறப்படுகிறது.

அதேசமயம், கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல் பணிகள் இப்போதைக்கு முக்கியமற்றவை என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத ஒரு அதிகாரி கூறினார்.

நிதித் துறையிலிருந்து நிர்வாக அனுமதி மற்றும் நெடுஞ்சாலைத்துறை முதன்மைப் பொறியாளரிடமிருந்து தொழில்நுட்ப அனுமதி ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே இந்த டெண்டர்கள் விடப்பட்டுள்ளன என்பதுதான் ஆச்சர்யம் என்கின்றனர் தொடர்புடைய வட்டாரத்தினர்.