நடிகர் சங்க பொதுக்குழுவில் வாஜ்பாயிக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்?: நடிகர் எஸ்.வி. சேகர் கேள்வி

சென்னையில் நேற்று நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு அஞ்சலி செலுத்தாதது  ஏன் என்று நடிகர் எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழுக் கூட்டம். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமை வகித்தார்.  பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்திக், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுக் குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.  துணைத்தலைவர் கருணாஸ் கடந்த ஆண்டுக்கான ஆண்டறிக்கையை வாசித்தார். நடிகர் சங்கக் கட்டிடம் வரும் 6 அல்லது 7 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டுடன் நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடியும் நிலையில், நடிகர் சங்க தேர்தலை 6 மாதம் ஒத்தி வைக்க பொதுக்குழு ஒப்புதல் அளித்தது.

இதுகுறித்து விஷால் பேசிய போது, ‘நடிகர் சங்கத்துக்கு இப்போதைக்கு தேர்தல் கிடையாது. கட்டடம் கட்ட இன்னும் 20 கோடி தேவைப்படுகிறது. 2 கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். தென்னிந்திய நடிகர் சங்கம் என்கிற பெயரும் மாற்றப்பட மாட்டாது’  என்றார்.

அப்போது பேசிய எஸ்.வி.சேகர், “நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்த வேண்டியது அவசியம். 80 களில் இருந்து உறுப்பினராக இருக்கும் என்னை நீக்கியது செல்லாது, என் உரிமைக்காக தான் இங்கு வந்தேன். கட்டிடம் கட்டிவிட்டு தான் தேர்தல் நடத்துவோம் என சொன்னால் அதை ஏற்க முடியாது” என்று பேசியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதற்கிடையே மறைந்த கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர், “முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், “நடிகர் சங்க சுய தம்பட்ட பொதுக்கூட்டத்தில் (பொதுக்குழு)மறைந்த பல கலைஞர்களுக்கும்,முன்னாள் முதல்வருக்கும், அஞ்சலி செலுத்தியவர்களுக்கு, நாடே 7 நாள் துக்கம் அனுசரிக்கும் வாஜ்பாய் அவர்களுக்கு 1 நிமிடம் அஞ்சலி செலுத்தத்தெரியவில்லை. இது அறியாமையா  . அகந்தையா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.