எடப்பாடியை ஆதரித்தது ஏன்?  நாகை எம்.எல்.ஏ. தமிமும் விளக்கம்

மிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தான், எடப்பாடி அரசை ஆதரித்ததற்கான காரணத்தை எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

கடந்த 18ம் தேதி தமிழக சட்டசபாயில், தனது அரசின் மீதான நம்பிக்கைத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார் முதல்வர் எடப்படாடி பழனிச்சாமி. “சசிகலாவின் முதல்வரான அவரை எம்.எல்.ஏக்கள் ஆதரிக்கக்கூடாது” என்று தமிழகம் முழுவதும் மக்கள் குரல் கொடுத்தனர். சமூக இணையதளங்களிலும் எழுதினர். இதே கருத்தை வலியுறுத்தி தங்கள் தொகுதி எம்.எல்.ஏக்களுக்கு கடிதம், வாட்ஸ் அப் செய்தி, பேஸ்புக் தனிச் செய்திகளை அனுப்பினர்.

இந்த நிலையில், மக்களின் கருத்தை அறிவதற்காகக, தனது அலுவலகத்தில் “கருத்துப் பெட்டி” வைத்தார் நாகை எம்.எல்.ஏ. தமிமும் அன்சாரி. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டவர் இவர்.

கருத்துப்பெட்டியில் சுமார் 2000 பேர் வாக்களித்திருந்த நிலையில், திடீரென அந்த பெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. தங்கள் கருத்தைத் தெரிவிக்க காத்திருந்த மக்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

இது நாகை தொகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கைத் தீர்மானத்தில் சசிகலா முன்னிறுத்திய எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்தார் தமிமுன் அன்சாரி. இது தொகுதி மக்களிடையே அதிருப்தியை அதிகப்படுத்தியது.

எடப்பாடியை ஆதரித்து வாக்களித்த எம்.எல்.ஏக்களுக்கு தமிழகம் முழுதும் அவரவர் தொகுதியில் மக்கள் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. அதே போல நாகை தொகுதியிலும் எம்.எல்.ஏ. தமிமும் அன்சாரிக்கு எதிராக மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தமிமும் அன்சாரி, தான் ஏன் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்தேன் என்று விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது:

“எமது தோழமை கட்சியான அதிமுகவில் ஏற்பட்ட சர்ச்சைகளை தொடர்ந்து , யார் முதல்வராக வரவேண்டும் என்ற விவாதம் அரசியலை பரபரப்பாக்கியது. இது குறித்து தொகுதி மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என தினமும் நூற்றுக்கணக்கான அலைப்பேசி அழைப்புகள் வந்தன .

அதனை மதித்து வேறு யாரும் செய்யத் துணியாத அரிய முயற்சியை , என் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனைப்படி முன்னெடுத்தேன் . கருத்துப் பெட்டியை வைத்து கருத்தாய்வை மேற்கொண்டேன் . அனைவருமே பாரட்டினார்கள் .

அங்கு 2 ஆயிரம் படிவங்கள் பூர்த்தியாயின . ஆனால் மக்கள் மேலும் திரண்டார்கள் . திரு . நாகராஜன் என்பவர் தலைமையில் சிலர் வந்து “ஓ.பி.எஸ்ஸு க்கு ஆதரவாக போடுங்க”  என கூச்சல் எழுப்பியதால் பதட்டம் உருவானது . குழப்பமும் உருவானது. இதனால் காவல் துறையின் அறிவுறுத்தலை ஏற்று நாங்கள் கருத்தாய்வை நிறுத்திவிட்டோம்.

அங்கே திரு OPS அவர்களது ஆதரவாளர்கள் ஒரு சார்பாக வாக்களிக்க தூண்டினார்கள் என்பதாக குற்றச்சாட்டு மறு தரப்பால் எழுப்பப்பட்டது . மேலும்  2 ஆயிரம் பேரின் கருத்துகளை மட்டுமே எடுத்துக் கொள்ள கூடாது என பலரும் கூறியதால் , அந்த கருத்தாய்வை நிராகரிக்க வேண்டியதாகிவிட்டது .

இந்நிலையில் , யாரை ஆதரிப்பது என எங்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு பலமுறை கூடி விவாதித்தது.

திரு . செங்கோட்டையன் அண்ணன் எங்கள் தலைமையகத்திற்கு வந்தபோது அவர் எங்கள் ஆதரவை கேட்டார் . அப்போது பூரண மதுவிலக்கு மற்றும் ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் முன் விடுதலை ஆகிய இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து , ஏற்கனவே 20 நாட்களுக்கு முன்பாக கொடுக்கப்பட்ட மஜகவின் கோரிக்கைகளையும் நினைவூட்டினோம் .

அதுபோல் , திரு . மதுசூதனன் அண்ணனும் , மா. ஃபா. பாண்டியராஜன் அண்ணனும் வந்தபோது , நீங்கள் பாஜக ஆதரவோடு அதிமுகவை பிளவுபடுத்துவதாக குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது . எனவே , வகுப்புவாத சக்திகளை வளர விடமாட்டோம் என்று ஒரு அறிக்கையை தாருங்கள் என்றோம் . பிறகு இவர்களின் சார்பில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் அண்ணன் ஜெயபால் அவர்களும் , கமலக்கண்ணன் அவர்களும் மீண்டும் வந்தபோது அவர்களிடமும் இதை வலியுறுத்தினோம் . இதற்கு பதில் இல்லை . அண்ணன் OPS அவர்கள் தரப்பு மெளனம் காத்தது .

அதன்பிறகு தமிழ் தேசிய தலைவர்களும் , திராவிட இயக்க தலைவர்களும் , சிறுபான்மை இயக்க தலைவர்களும் எங்களிடம் பேசினார்கள் . பா ஜ க வின் சூழ்ச்சியை முறியடிக்க திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஆதரிப்பது தான் நல்லது என்றார்கள் .

எனவே சமூகநீதி காக்கவும், சமூக நல்லிணக்கத்தை காக்கவும் தமிழகத்தின் நலன்கருதி , நாங்கள் அண்ணன் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்தோம் .

 

இடையில் இரு தரப்பையும் ஒன்றிணைக்க சமாதான முயற்சிகளையும் முன்னெடுத்தோம்.

அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் நாகை தொகுதியில் உள்ள அண்ணன் ஓ.பி.எஸ்.ஆதரவாளர்கள் “ நீங்கள் ஏன் எடப்பாடிக்கு வாக்களித்தீர்கள்” என கேட்கிறார்கள் . அதற்கான விளக்கத்தை மேலே தெளிவாக கூறிவிட்டோம் .

அடுத்து அதிமுக வின் 121 எம்.எல்.ஏக்களும்  ஒரு தெளிவான முடிவுக்கு வந்துவிட்டார்கள் . தங்கள் கட்சியான அதிமுக பிளவுபடக்கூடாது என்றும் , ஆட்சிக் கவிழக் கூடாது என்றும் அவர்கள் முடிவெடுத்துள்ள நிலையில் , தோழமை கட்சியான நாங்கள் அதற்கு ஆதரவளிப்பது தான் கூட்டணி நியாயமாகும்.

எனது ஒரு ஓட்டு இல்லாவிட்டாலும் அவர்கள் ஆட்சி அமைத்துவிடுவார்கள் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும் .  இந்நிலையில் தொகுதிக்கு எஞ்சிய 4 ஆண்டு காலத்திற்கு பல நன்மைகளை செய்யும் ஒரு வாய்ப்பையும் , தமிழ் சமுதாயத்திற்காகவும், சிறுபான்மை சமுதாயத்திற்காகவும் பணியாற்றும் ஒரு வாய்ப்பையும் இழந்து விடக்கூடாது என தமிழ் சான்றோர்களும் , சமுதாயப் பெரியவர்களும் கூறிய அறிவுரைப்படியே நான் முடிவெடுத்தேன் . எங்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவும் அவ்வாறே வழி காட்டியது .

இந்நிலையில் , தொகுதியில் உள்ள அண்ணன் OPS ஆதரவாளர்கள் என் மீது வருத்தப்படுவதில் அர்த்தமில்லை . நாங்கள் இரட்டை இலை சின்னம் உள்ள அதிமுகவுடன் கூட்டணி என்ற அடிப்படையில் பயணிக்கிறோம்.

எங்களின் யதார்த்த நிலையை புரிந்து கொள்ளாமல் எங்களை கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது .

நான் உறுதியாக நம்பும், இறைவன்_மீது_ஆணையாக இவ்விசயத்தில் நேர்மையாகவும் , கண்ணியமாகவும் நானும் என் கட்சியினரும் நடந்துக் கொண்டுள்ளோம்.

ஏதோ பணத்திற்கு விலை போனது போல அண்ணன் ஓ.பி.எஸ். அவர்களின் ஆதரவாளர்கள் எங்களை விமர்சிப்பது அதிர்ச்சியளிக்கிறது” –இவ்வாறு தமிமும் அன்சாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.