தமிழகம் வந்த மோடியை புறக்கணித்தது ஏன்? நாராயணசாமி விளக்கம்

புதுச்சேரி:

ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைக்க நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடியை தமிழக கவர்னர், முதல்வர் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து மாமல்லபுரம் அருகே நடைபெற்ற ராணுவ கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள  அண்டைய மாநிலமான புதுச்சேரி மாநில முதல்வருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால், புதுவை முதல்வர் நாராயணசாமி பிரதமரின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பு செய்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி,  சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை, திருவிடந்தையில் பாதுகாப்புத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ராணுவத் தளவாடக் கண்காட்சி நிகழ்ச்சியில்  பங்கேற்க மத்திய ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எனக்கு கடிதம் எழுதியிருந்தார். ராணுவத் துறை சார்பிலும் அழைப்பிதழ் வந்திருந்தது.

ஆனால்,  காவிரி மேலாண்மை வாரியம், நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவை அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சியை நான் புறக்கணித்தேன் என்று கூறினார்.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம், நதிநீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மேற்கொண்ட நடைப்பயணம் புதன்கிழமை காரைக்காலுக்கு வந்தபோது, நானும் அமைச்சர்களும் பங்கேற்றோம். விவசாயிகளுக்காக நாங்கள் எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக உள்ளோம் என்றும் கூறினார்.

தமிழகம், புதுவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், திரையுலகினர், எழுத்தா ளர்கள், பொதுமக்கள் ஒருங்கிணைந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.

தமிழகம், புதுவை மாநில விவசாயிகள் அனைவருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும். தமிழகம், புதுவை மாநில மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உத்தரவை அறிவிப்பார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.