திமுக முகாமிலிருந்து பாரிவேந்தர் ஏன் வெளியேறினார்? – வெளியாகாத தகவல்கள்!

திமுக கூட்டணியிலிருந்து பாரிவேந்தரின் கட்சியான ஐஜேகே விலகியுள்ளது தொடர்பாக, தற்போதுவரை, அரசியல் அரங்கில் குறிப்பிடத்தக்க அதிர்வுகள் ஏற்படவில்லை.

அதிர்வுகள் ஏற்படும் அளவிற்கு, ஐஜேகே பெரிய கட்சி இல்லைதான்! அதேசமயம், உதயசூரியன் சின்னத்தில் நின்று, பெரம்பலூர் தொகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ளார் பாரிவேந்தர் என்ற விஷயம்தான் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினராகவே பாரிவேந்தர் கருதப்படுவார் என்ற நிலையில், கூட்டணியிலிருந்து விலகியுள்ளார் அவர். கடந்த மக்களவைத் தேர்தலில், பாமக அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற நிலையில், வடமாவட்டங்களில் வன்னியர் அல்லாத மற்றும் தேர்தலில் வன்னியர் எதிர்ப்பு மனநிலைக் கொண்ட இதர சாதிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக, உடையார் சமூகத்தைச் சேர்ந்த பாரிவேந்தர் திமுக கூட்டணியில் இழுக்கப்பட்டார் என்று கூறப்பட்டது. மேலும், அவர் திமுக தலைமையிடம் கணிசமான ஸ்வீட் பாக்ஸ்களை கைமாற்றினார் என்றும் செய்திகள் கசிந்தன.

தற்போது, திடீரென திமுக கூட்டணியிலிருந்து விலகி, சரத்குமார் கட்சியுடன் கூட்டணி ‍அமைக்கிறார். இவர்களின் இந்தக் கூட்டணி, கமலுடன் இணையவும் முயற்சிக்கிறது.

நாடாளுமன்றத்தில், சட்டப்பூர்வமாக திமுக உறுப்பினராகவே நீடிக்க வேண்டிய சூழலில், தற்போதும் பாமக அதிமுக கூட்டணியிலேயே இருக்கையில், பாரிவேந்தர் விலகியிருப்பது தற்போதுவரை எந்த முக்கியத்துவத்தையும் பெறவில்லை.

திமுக தலைமைக் கழக செயலாளர் கே.என்.நேரு, அந்தக் கட்சியின் விலகலால் எந்த நட்டமும் இல்லை என்று கேஷுவலாக கூறிவிட்டார்.

அதேசமயம், வரும் நாட்களில், கமலுடன் பாரிவேந்தரின் புதிய கூட்டணி இணையும்பட்சத்தில், வேறுபல தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பின்னால் பாஜக இருக்கிறதா? என்பதும் அப்போது தெரிந்துவிடும்.