மும்பை: ஐபிஎல் போட்டிகளின் துவக்கத்திற்கு பிறகு, இந்திய வீரர்கள் உலகின் வேறு டி-20 தொடர்களிலோ அல்லது டி-10 தொடர்களிலோ எதற்காக பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என்பதற்கான விளக்கம் கிடைத்துள்ளது.
தற்போது கிரிக்கெட் விளையாடும் நாடுகளிலேயே, பெரிய மக்கள்தொகை கொண்ட மற்றும் வெறிப்பிடித்த அதிக  கிரிக்கெட் ரசிகர்களைக் கொண்ட நாடு இந்தியாதான். எனவே, இந்திய வீரர்கள் வேறு எந்த அணிகளில் விளையாடினாலும், இந்திய ரசிகர்களின் கவனத்தை அவற்றின் பக்கம் இழுக்கலாம்.
இதுதான் பல நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் விருப்பமும்கூட. அந்த வாரியங்கள், பிரபல இந்திய வீரர்களை நல்ல பணங்காய்க்கும் மரங்களாகப் பார்க்கின்றன. இந்திய வீரர்கள் பலர் முன்னர் வேறுநாட்டு உள்ளூர் லீக் போட்டிகளில் ஆடியுள்ளனர் என்பதை நாம் அறிவோம்.
ஆனால், ஐபிஎல் தொடர் துவக்கப்பட்ட பின்னர், உலகின் மிகப்பெரிய உள்ளூர் கிரிக்கெட் தொடராகவும், பணமழை பொழியும் வைபவமாகவும் மாறிப்போனது ஐபிஎல் தொடர். ஒவ்வொரு ஐபிஎல் சீசனின்போதும் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனமும் ஐபிஎல் தொடரின் மீது திரும்பும் நிலை ஏற்பட்டது.
வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் பலரும், ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரை எதிர்பார்த்து, இந்தாண்டு எவ்வளவு கல்லா கட்டலாம் என்று ஏங்கும் நிலை! இருநாட்டு அரசியலால் தங்களுக்கான வாய்ப்பு அநியாயமாகப் பறிபோய்விட்டதே என்ற வேதனை பாகிஸ்தான் வீரர்களுக்கு!
இந்நிலையில், இந்திய வீரர்களை வேறுநாட்டு உள்ளூர் லீக் போட்டிகளில் ஆட அனுமதிக்கையில், இந்திய வீரர்கள் அந்த விளையாட்டுத் தொடர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவே செய்வார்கள். இதன்மூலம், ரசிகர்களின் கவனமும் அப்பக்கம் திரும்பும். இந்தவகையில், ஐபிஎல் தொடரின் முக்கியத்துவம் குறைந்து, அது தனது முதன்மை முக்கியத்துவத்தை இழக்கலாம்.

இதைத்தான் பிசிசிஐ அமைப்பு விரும்பவில்லை. சீனாவில் ஒருமுறை நடத்தப்பட்ட கிரிக்கெட் தொடரிலும், இந்திய அணியை அனுமதிக்கவில்லை அந்த அமைப்பு. ஏனெனில், தனது கிரிக்கெட் முக்கியத்துவத்தை இந்தியா சீனாவிடம் பறிகொடுக்க விரும்பவில்லை.
இதனால்தான், ஐபிஎல் தொடர் கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியவுடன், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் டி-20 தொடர்களில் ஆடிவந்த இந்திய வீரர்கள், அதிலிருந்து விலக வைக்கப்பட்டனர்.
உலக கிரிக்கெட் வணிகத்தை, இந்தியாவை மையமாக வைத்தே சுற்ற வைக்க வேண்டுமென்ற பிசிசிஐ அமைப்பின் விருப்பம்தான், இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி-20 தொடரகளில் ஆட முடியாதது..!