டில்லி:

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ என்ற புத்தகத்தில் பாஜக மற்றும் தமிழகத்தில் இதன் பங்கு குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அதில், ‘‘தமிழக ஆளுங்கட்சியான அதிமுக.வில் பிளவு ஏற்பட்ட பின்னரும் ஆட்சி தொடர்ந்து நடக்கிறது. ஆட்சிக்கு எந்த விதமான பாதிப்பு ஏற்படவில்லை. பட்ஜெட் கூட்டத் தொடர் விரைவில் தொடங்கவுள்ளது. ஆனால், இது வரை நம்பிக்கை இல்லா தீர்மானம், இதர சட்ட மசோதா உள்ளிட்டவைகளை நிறைவேற்ற வாக்கெடுப்பு கோரவில்லை. எம்எல்ஏ.க்கள் பிழைப்புக்கு கையாளப்படும் நவீன கால யுக்தியாகவே இது உள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழகத்தின் பாஜக தனக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலை மட்டும் மனதில் கொள்ளாலம் நீண்ட நாள் திட்டமாக தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை திணிப்பதற்கு முன்பே அதிமுக.வுடுன் கூட்டணி அமைப்பதில் வெற்றி பெற பாஜக துடிக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த கட்டுரையில், ‘‘தற்போது தமிழக அரசுக்கும், அதிமுக.வுக்கும் தலைமை இல்லை. தினந்தோறும் ஊழல் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஆட்சியில் இருக்கும் ஒருவர் கூட இது குறித்து கவலை அடைவதாக தெரியவில்லை. அதிமுக.வின் அனைத்து பிடிமானமும் பாஜக, ஆர்எஸ்எஸ் வசம் உள்ளது. அதனால் இந்த அரசை தோல்வி அடையும் செயல் எதுவும் நடக்காது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பெரிய அளவிலான ஊழல் வழக்குகள் தமிழகத்தில் வெளி கொண்டு வரப்பட்டுள்ளது. நிர்வாக ஊழல் மலிந்துவிட்டது. தமிழகத்தில் அனைத்துக்கும் விலை பட்டியல் உள்ளது. சேவை மற்றும் விலை அடங்கிய ஒரு வகையான விலைப்பட்டியல் உள்ளது. ஒரு சேவையை இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள விலையில் பெறலாம். தற்போதைய அரசின் அனைத்து நடைமுறைகளும் பரவலாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமைச்சரும், எம்எல்ஏ.வும் ஒரு முதல் அமைச்சராக அவர்களது தொ குதியில் செயல்படுகின்றனர்’’ என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

‘‘மாநில அரசின் நிதி நிலவரம் கட்டுப்பாட்டை மீறி சென்று கொண்டிருக்கிறது. 2017&18ம் ஆண்டில் இறுதியில் கடன் ரூ. 3.14 லட்சம் கோடியாக இருக்கும். வருவாய் ஆதாரமாக 1.59 லட்சம் கோடி மட்டுமே இருக்கும். மின்சார உற்பத்திக்கு 22 ஆயிரத்து 815 கோடி கடன் வாங்கியது. இதனால் 2016&17ம் ஆண்டில் நிதி பற்றாகுறை 4.58 சதவீதமாக உயர்ந்தது. சுகாதாரம், குடும்ப நலன், குடிநீர் விநியோகம், துப்புரவு, நகர்புற மேலாண்மை ஆகியவற்றில் சரிவு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் தலைவர்கள் தினமும் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் சாப்பிட்டுக் (சுரண்டி) கொண்டு இருக்கிறார்கள். மாநில பொருளாதாரத்தை மொத்தமாக சாப்பிட்டுக் (சுரண்டி) கொண்டிருக்கின்றனர். ஆனால், பிரதமர் யாரையும் சாப்பிட (ஊழல் செய்ய) விடமாட்டோம் என்று கூறுகிறர். ஆனால், இவரது இந்த வார்த்தைக்கு பிறகு அதிமுகவிலும், தமிழக அரசிலும் ரொட்டி உடைப்பது (பங்கு வாங்குவது) ஏன்? என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று ப.சிதம்பரம் அந்த கட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.