டில்லி விமானநிலையத்தில் இருந்து சிஐஎஸ்எப் வீரர்கள் வாபஸ்…..உள்துறை மிரட்டல்

டில்லி:

டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட் டுள்ளனர். 4 ஆயிரம் வீரர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிஐஎஸ்எப் பாதுகாப்பு பணிக்கு டில்லி சர்வதேச விமானநிலைய நிறுவனம் ஆண்டுதோறும் அதற்கான கட்டணத்தை வழங்க வேண்டும்.

இந்த வகையில் தற்போது ரூ.600 கோடியை விமானநிலைய நிறுவனம் வழங்காமல் நிலுவை வைத்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக முழு தொகையையும் வழங்காமல் ஆண்டுதோறும் ரூ.100 கோடியை அந்நிறுவனம் நிலுவை வைத்துள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சகம் விமான போக்குவரத்து அமைச்கத்துக்கு கடிதம் எழுதியது. எனினும் பணம் வழங்கப்படவில்லை.

இதனால் விமானநிலையத்தில் இருந்து சிஐஎஸ்எப் வீரர்களை திரும்ப பெறும் முடிவை எடுப்பதை தவிர வேறு வழி இல்லை என்று உள்துறை தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக கார்கோ பிரிவில் உள்ள சிஐஎஸ்எப் வீரர்கள் திரும்ப பெறப்படவுள்ளனர்.

இது குறித்து விமானநிலைய நிறுவன அதிகாரி கூறுகையில்,‘‘பயணிகளிடம் இருந்து பாதுகாப்பு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால், இந்த கட்டணம் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயம் செய்யப்பட்டது. பாதுகாப்பு செலவு என்பது வரம்பு மீறி சென்று கொண்டிருக்கிறது.

செலவு அதிகரிப்பு காரணமாக பயணிகள் பாதுகாப்பு கட்டண நிதி வசூலில் பாதித்துள்ளது. இதன் காரணமாக தான் நிலுவை வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக சிஐஎஸ்எப் மற்றும் விமான போக்குவரத்து ஆணையத்திடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றார்.