Random image

ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் ஏன் சிகிச்சை அளிக்கப்படவில்லை? ஆளுநரின் தனிச்செயலாளரிடம் விசாரணை ஆணையம் கேள்வி

சென்னை:

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் ஏன் சிகிச்சை அளிக்கப்படவில்லை? என்று அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவின் தனிச்செயலாளரிடம் விசாரணை ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழகத்தின் முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் தனிச்செயலாளர் ரமேஷ் சந்த் மீனா இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்திய ஆறுமுகசாமி கமிஷன், அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக ஏன் வெளிநாடு அழைத்துச் செல்லவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும்,  விசாரணை ஆணையத்தில் அப்பலோ மருத்துவர்கள் விக்னேஷ், ராஜ் பிரசன்னா ஆகிய இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். நேற்றைய விசாரணைக்கு ஆஜரான அப்பல்லோ மருத்துவர்கள் நேற்று விசாரணை முடியாத நிலையில் இன்று மீண்டும் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

அதுபோல தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவரான விக்னேஷிடம், ஜெயலலிதா ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டது எப்போது? அங்கு ஜெயலலிதாவைச் சந்திக்க யார், யாருக்கு அனுமதி வழங்கப்பட்டது?, உடன் இருந்தது யார்? இதய செயலிழப்பு ஏற்பட்டது எப்போது? என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது? உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் விசாரணை ஆணையத்தில் ஆஜரான  அப்பலோ மருத்துவமனையின் தலைமை ஃபிசியோதெரபிஸ்டான மருத்துவர் ராஜ் பிரசன்னாவிடம், சிகிச்சைக்கு ஜெயலலிதாவின் உடல் ஒத்துழைத்த விதம் குறித்து  ஆணையம் விசாரித்ததாகவும், அப்போது அவர், மருத்துவமனையில் ஜெ. சிகிச்சை பெற்றபோது, 59 நாட்கள் 120 முறை அவருக்கு பிசியோதெரபிஸ்ட் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக அப்போலா மருத்துவர் பிரசன்னா ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் வாக்குமூலம் அளித்துள்ளதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

விசாரணை ஆணையத்தின் காலம் விரைவில் முடிவடைய இருப்பதால், விசாரணை விரைவாக நடைபெற்று வருகிறது.