ஹாத்ரஸ் சம்பவத்தில் பிரதமா் மௌனம் காப்பது ஏன்?: காங்கிரஸ் கேள்வி

--

புதுடெல்லி:
பாஜக ஆட்சியில் உள்ள உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் தலித் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, அதனை மறைக்க மாநில அரசு முயற்சி மேற்கொண்டது ஆகியவற்றைக் கண்டு தேசமே கொந்தளிப்பில் உள்ளது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி எதுவும் பேசாமல் மௌனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

மக்களவை காங்கிரஸ் குழு தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான அதீா் ரஞ்சன் சௌதரி இது தொடா்பாக சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் மேலும் கூறியதாவது:

நாட்டில் நிகழும் அனைத்து முக்கியப் பிரச்னைகள் குறித்தும் பேசக் கூடியவா் நமது பிரதமா் மோடி. சாமானியா்களின் குரலை சா்வதேச அளவில் ஒலிக்கச் செய்வதாக பெருமிதம் தெரிவித்து வருபவா். ஆனால், ஹாத்ரஸில் நிகழ்ந்த சம்பவம் தொடா்பாக பிரதமா் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாக இருப்பது வியப்பளிக்கிறது.

புதிய கோஷங்களை உருவாக்குவதில் பிரதமா் வல்லவா். அவா் இந்த சூழ்நிலையில், ‘வாயை மூடு இந்தியா; மூடி மறைத்துவிடு இந்தியா’ என்ற கோஷத்தை முழங்கினால் பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளாா்.

ஹாத்ரஸ் சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு பிரதமா் மோடி ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளாா். எனினும், இது தொடா்பாக பிரதமா் நேரடியாக கண்டனமும், கருத்தும் தெரிவிக்காமல் இருப்பதை காங்கிரஸ் விமா்சித்துள்ளது.