நெட்டிசன்:

தமிழக அமைச்சரவையில் சிறப்பாக பணியாற்றி வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுக தலைமையால், ஓரங்கட்டப்பட்ட நிலையில், அவருக்குரிய சுகாதாரத்துறை தகவல்களை அமைச்சர் வேலுமணி செய்தியாளர் களிடம் கூறி வருகிறார்.

இது, அதிமுகவில் நிகழ்ந்து வரும் மோதல்களை அம்பலப்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் என்ற பெயரில் பல இடங்களில் புதியதாக ஒரு போஸ்டர்  ஒட்டப்பட்டு உள்ளது.

அதில்,  சுகாதாரத்துறை செயலாளர் டாக்ர் பீலா ராஜேஷ் ஐஏஎஸ் அதிகாரி மீது சேர் வாரி வீசப்பட்டு உள்ளது. அமைச்சர் ஆதரவாளர்களின் இந்த அநாகரிக செயல், அதிகாரிகள் மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் எடப்பாடி அரசு மீது பொதுமக்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை,  அதிமுகவில்,  சசிகலாவும் அவரது உறவினர்களும், அவரது ஜாதியான கள்ளர், மறவர்களின் ஆதிக்கமே அதிகரித்து வந்தது. மற்றவர்கள் ஆட்சி அதிகாரத்திலும், காண்டிராக்டிலும் பங்குபெற முடியாத சூழல் தொடர்ந்து வந்தது. அந்த அளவுக்கு மன்னார்குடி மாஃபியாக குரூப் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

ஆனால், அவரது மறைவுக்கு பிறகு, எப்போது எடப்பாடி முதல்வர் ஆனாரோனா, அன்றுமுதல், தமிழக அமைச்சரவையில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் செல்வாக்கு கொடிகட்டி பறக்கிறது.(அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட பலர்)  அனைத்து துறையிலும், இந்த கோஷ்டிகளின் ஆட்டம் எல்லை மீறி சென்றுகொண்டிருக்கிறது.

கொங்கு மண்டல அமைச்சர்கள் பலருமே தங்களை நிழல் முதல்வர்கள் போல நினைத்துக் கொண்டுதான் செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் ஆதிக்கம், அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் எல்லைமீறி சென்றுகொண்டிருக்கிறது.

அதிமுகவில் கொங்கு கோஷ்டி கை ஓங்கியிருப்பதை கண்டு மன்னார்குடி வட்டாரங்கள், அவர்களது ஜாதியை கொண்ட அமைச்சர்கள் ரொம்பவே கொந்தளித்துபோய் உள்ளனர்.

ஆனால், அதிமுக அரசின் ஆட்சி காலம் இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தற்போது முறைத்துக்கொண்டால், தங்களது சம்பாத்தியதுக்கு தடை ஏற்பட்டுவிடுமே என்ற அச்சத்தில், கொங்கு மண்டல அமைச்சர்களை முறைத்துக்கொள்ளாமல் செயல்பட்டு வருகின்றனர்.

இதன் எதிரொலிதான்.. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஓரங்கட்டப்பட்ட நிகழ்வு. அமைச்சரின் தீவிரமான ஈடுபாடு, கொரோனா நடடிவக்கையில் அவர் மேற்கொண்ட நடவடிக்கை, கொங்குமண்டல அமைச்சர்களுக்கு கிலியை ஏற்படுத்தியது.

ஏற்கனவே காண்டிராக்டர்களையும், உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளையும் மிரட்டி, மாதம் ஒன்றுக்கு இவ்வளவு பணம் தர வேண்டும் என மிரட்டி வசூலித்து வரும், இந்த துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களும், அவர்களின் அடிவருடிகளுக்கும், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மக்களிடையே எழுந்த அமோக வரவேற்பை ஜீரணிக்க முடியவில்லை.

அமைச்சர் மீது இல்லாததும், பொல்லாததுமாக கூறி, முதல்வர் எடப்பாடிக்கு சாம்பிராணி போட்டு, அமைச்சர் விஜயபாஸ்கரை ஓரங்கட்ட  முடிவு செய்யப்பட்டது. அதன் எதிரொலிதான்,  சமீபத்தில் கொரோனா பாதிப்பு குறித்து கவர்னரை சந்திக்க சென்ற முதல்வர் எடப்பாடி,  அந்த துறைக்கான அமைச்சரை அழைக்கவில்லை. இதை , சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா நினைவுபடுத்தியும்,. அதை ஏற்க மறுத்து அவரை மட்டுமே அழைத்துச் சென்று கவர்னரை சந்தித்து பேசிவிட்டு வந்தார்.

இதற்கிடையில், அமைச்சர் விஜயபாஸ்கரின் நடவடிக்கையை பாராட்டி சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பாராட்டுகளை வழங்கிய நிலையில், நெட்டிசன் ஒருவர், அவரை “வாழும் போதி தர்மரே” என்கிற ரேஞ்சுக்க்கு உயர்த்தியது, கொங்கு மண்டல அமைச்சர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அன்றுமுதல் இன்றுவரை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள், தமிழகஅரசுக்கும், முதல்வரக்கு  நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் அளவுக்கு கேள்வி எழுப்பி உள்ளனர்.  மக்களுக்காக ஆட்சி செய்கிறீர்களா, அல்லது உங்கள் நலனுக்காக ஆட்சி செய்கிறீர்களா என்று அதிமுக அரசை வறுத்தெடுத்து வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிரமான நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு, விருப்பப்பட்டடவர் கள் ஜாலியாக ஊர் சுற்ற அனுமதி வழங்கி வருவதற்கும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அதிமுக அரசின் கையாலாகததனத்தால்தான் இன்று கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் உச்சக்கட்டத்தில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள், இது அதிமுக அரசின் தோல்வியை பறைசாற்றுவதாக தெரிவித்து உள்ளனர்.

ஆனால், விஜயபாஸ்கர் ஆதரவாளர்களோ, எடப்பாடி மீதும், அவரது ஆதரவு கொங்குமண்டல அமைச்சர்கள் மீதும் கோபம் கொள்ளாமல், சுகாதாரத்துறைச்செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் மீது சேரை வாரி பூசி வருகின்றனர்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய உள்ளாட்சித்துறைஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கொரோனா குறித்த தகவல்களை தெரிவித்து வருகிறார். இது செய்தியாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

சுகாதாரத்துறைக்கு அமைச்சர் இருக்கும்போது, இவர் ஏன் அந்த துறை தகவர்களை கூறுகிறார் என்று அதிகாரிகளி டம் சில செய்தியாளர்கள் கேட்டபோது, சரியான பதில் கிடைக்கவில்லை என்று தெரிவித்து உள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கரை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதோ என்ற  கேள்விகள் எழுந்துள்ளது.

ஆனால், விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள், அமைச்சர் வேலுமணி மீது பாயாமல், திறமையாக பணியாற்றி வரும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி மீது பாய்ந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பணியில் இரவு பகல் பாராது உழைத்து வரும் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிமீது, அமைச்சரின் ஆதரவாளர்கள் தேவையற்ற அரசியல் செய்வது அநாகரிகம். இது கண்டிக்கத்தக்கது.

உண்மையிலேயே விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களுக்கு தில் இருந்தால், அமைச்சர் வேலுமணி மீது தங்களது எரிச்சலை கொட்டியிருக்க வேண்டும். அதை விடுத்து,திறமையான ஒரு ஐஏஎஸ் அதிகாரி மீது, அரசியல் மற்றும் ஜாதிய  சாயம் பூசுவது, அதிமுகவின் அழிவுக்கு அடித்தளம் போடுமே தவிர, உங்களின் எதிர்காலத்துக்கு உதவாது.

அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களின் கோழைத்தனமான போஸ்டரால், தென்மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரின் வாக்கு வங்கியை அதிமுக இழக்க நேரிடும் என்பதே உண்மை.

சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலே ராஜேஷ்-ன் தந்தை ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி. அது மட்டுமின்றி, அவரது தாயார், ராணி வெங்கடேசன், சாத்தான்குளம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக சட்டமன்றத்தில் பணியாற்றிய  சட்டமன்ற உறுப்பினர்.  இவ்வளவு பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்த பீலா ராஜேஷ் ஐஏஎஸ், இன்றைய அரசியல்வாதிகளுக்கு குறைந்தவர் இல்லை என்பதை அதிமுக அமைச்சர்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்..

தமிழக சுகாதாரத்துறையின் செயலாளர் பீலா ராஜேஷ் இன்று என்ன சொல்லப்போகிறார் என்று, தமிழகமே உற்று நோக்கும், மிக முக்கிய நபராக மாறியிருக்கிறார். அதுபோல, மத்தியஅரசு மட்டத்திலும், அவரது பணி மற்றும் நடவடிக்கைகளுக்கு  தனி மரியாதை கிடைத்துள்ளது.  கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றிய செய்திகளையும் அரசின் நடவடிக்கைகளையும் இவரிடமிருந்துதான் மத்தியஅரசும், மாநில மக்களும் அறிந்து கொள்கிறார்கள். 

உண்மை இப்படி இருக்க, அமைச்சர் விஜயபாஸ்கரின் அடிவருடிகள், வேலியில் போகும் ஓணானை வேஷ்டிக்குள் போட்டுக்கொண்டதைப்போல, செயல்பட்டு வருகின்றனர். இது அவர்களின் அரசியல் எதிர்காலத்துக்கு சாவு மணி அடித்து விடும்.