ஜெ. சசி வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது ஏன்? வருமான வரித்துறை விளக்கம்


சென்னை,

ங்களுக்கு கிடைக்கப்பெற்ற   உறுதியான தகவலின் அடிப்படையில் தான் சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் ஜெயலலிதாவின்  போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

கடந்த வாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய மிகப்பெரிய ரெய்டு தமிழகத்தில் சசிகலா குடும்பத்தினர் விடுகளில் நடைபெற்றது. ஒரே நேரத்தில் 187 இடங்களில் 1800க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை பல இடங்களில் 5 நாள் வரைக்கும் தொடர்ந்தது.

இந்த சோதனையின்போது சசிகலா குடும்பம் மூடி மறைத்த ரூ 1340 கோடி மதிப்பிலான எரி ஏய்ப்பு,  ரூ 5 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் இதுவரை மதிப்பிடப்படாத ஏராளமான வைரக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் 15 லாக்கர்களும் சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திலும் இரவு சோதனை நடைபெற்றது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், சோதனை நடத்தப்பட்டது ஏன் என்பது குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

அதில், சசிகலா குடும்பத்தினர்  வரி ஏய்ப்பு குறித்து வருவாய் நுண்ணறிவு பிரிவு மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அதன் பிறகே சோதனை நடத்தப்பட்டது என்று கூறி உள்ளது.

மேலும், உறுதியான தகவல்  மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் தான் சோதனை நடந்தது. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் சசிகலாவின் 4 அறைகள் மற்றும் பூங்குன்றனின் ஒரு அறையிலும் சோதனை செய்யப்பட்டது. அந்த அறைகளின் சாவிகள் இளவரசியின் மருமகனான ராஜராஜனிடம் இருந்து பெறப்பட்டது.

ஆனால் ஜெயலலிதாவின் அறையில் சோதனை நடத்தப்படவில்லை.

போலி நிறுவனங்கள்

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த தொடர் சோதனையில் 70-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 17 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பென் டிரைவ்கள் மற்றும் லேப்டாப் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சோதனை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. தேவையெனில்  நீதிமன்ற அனுமதி பெற்று சசிகலா மற்றும் இளவரசியிடமும் விசாரணை நடத்தப்படும்.

தமிழக போலீசாரின் உதவியே போதுமானதாக இருந்ததால் சோதனையின்போது துணை ராணுவத்தை நாடவில்லை.

இவ்வாறு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.