“போதைப்பொருள் பயன்படுத்திய கங்கனா மீது எப்போது விசாரணை ?” – காங்கிரஸ் கேள்வி…

 

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தி சினிமா உலகத்தினரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்.சி.பி) மூலமாக மத்திய அரசு பயமுறுத்துகிறது” என குற்றம் சாட்டியுள்ளார்.

“போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும், இந்தி உலகத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி சில சினிமா நட்சத்திரங்களை என்.சி.பி. விசாரித்தது. அவர்கள் வீடுகளில் சோதனையும் நடத்தப்பட்டது. சிலர் கைது செய்யப்பட்டார்கள்” என குறிப்பிட்டுள்ள சச்சின் சாவந்த் “ஆனால் நடிகை கங்கனா ரணாவத்திடம் விசாரணை நடத்தாதது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

“தனக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் வழக்கமுள்ளது என கங்கனா பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களாக சமுக வலைத்தளங்களில் உலா வருகிறது” என குறிப்பிட்டுள்ள சாவந்த் “கங்கனா மும்பை வந்துள்ளார். அவரிடம் எப்போது விசாரணை நடத்தப்போகிறீர்கள் ?” என வினா தொடுத்துள்ளார்.

“இந்தி சினிமா உலகத்தினருக்கு, போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கங்கனா கூறி உள்ளார். எனவே, தனக்கு தெரிந்த தகவல்களை, கங்கனா என்.சி.பி.யிடம் சொல்ல வேண்டும் என பா.ஜ.க. அவரை அறிவுறுத்த வேண்டும்” என்றும் சாவந்த் வலியுறுத்தியுள்ளார்.

– பா. பாரதி