ரஃபேல் முறைகேடு தொடர்பான மறுசீராய்வு வழக்கில், பத்திரிக்கைகளில் வெளியான ஆவணங்களையும் புதிதாக இணைத்துக்கொள்வது என உச்சநீதிமன்றம் எடுத்திருக்கும் முடிவு, மோடி அரசுக்குப் பின்னடைவு என்று கருத்துக் கூறியுள்ள அரசியல் பார்வையாளர்கள், அந்தப் புதிய ஆவணங்களைக் கண்டு எதற்காக மத்திய அரசு பயப்பட வேண்டும்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்தத் தீர்ப்பை வழங்கியது.

ஆனால், மேற்கண்ட கூடுதல் ஆவணங்களை விசாரணையில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என மத்திய அரசு சார்பில் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டும், உச்சநீதிமன்றம் அந்த எதிர்ப்பை நிராகரித்துவிட்டது.

பொதுமக்களின் பணம் சார்ந்த விஷயங்களில், அதிகாரம் சார்ந்த ரகசிய சட்டத்தைப் (Official Secrets Act) பயன்படுத்தி, சட்டப்பூர்வ விசாரணையிலிருந்து தப்பித்துகொள்ள முடியாது என்பதை உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அவர்கள் மேலும் கூறுவதாவது; கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஃபேல் தொடர்பாக வெளிவந்த உச்சநீதிமன்ற தீர்ப்பில், அரசுக்கு வெற்றி கிடைத்தது. ஆனால், தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஒரு விஷயத்தின் நம்பகத்தன்மை மற்றும் முக்கியத்துவம்தான் கணக்கில் கொள்ளப்பட வேண்டுமே தவிர, அந்த விஷயம் எந்த வழியில் கிடைத்தது என்பது முக்கியமல்ல.

மேலும், ஒரு ரகசியம் வெளியாகிறது என்றால், அதற்கு ஊடகங்கள் எந்த வகையிலும் பொறுப்பாகாது. குறிப்பிட்ட துறையில்தான், அதை யாரோ உள்ளிருந்து செய்கிறார்கள்.

தன் மடியில் கனமில்லை என்றால், வழக்கு செல்லும் வழியை நினைத்து மத்திய அரசு ஏன் அஞ்ச வேண்டும்? என்று கேள்வியெழுப்புகின்றனர் அவர்கள்.

– மதுரை மாயாண்டி