இந்தியாவின் புதிய தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் பயமற்று இருப்பது ஏன்? – கங்குலி விளக்கம்

கொல்கத்தா: வாழ்வின் பல்வேறு அம்சங்களை எதிர்கொள்ளும் வாய்ப்பை பெறுவதால், இந்தியாவின் இளம் தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் பயமற்றவர்களாக இருக்கின்றனர் என்று கருத்து தெரிவித்துள்ளார் கங்குலி.

அவர்களில் சிலர், சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னதாகவே, உலக கிரிக்கெட்டின் சவால்களை சந்திப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். ஏனெனில், அந்த சவால்கள் அவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவையாக இருக்கின்றன என்றுள்ளார் அவர்.

அவர் மேலும் கூறுவதாவது, “தற்போதைய கிரிக்கெட் உலகில், அனுபவங்கள் அதிகளவில் கிடைக்கின்றன. இதன்மூலம், இந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பயமற்றவர்களாக மாறுகிறார்கள். கிரிக்கெட் தொடர்பான பல்வேறான விஷயங்கள், தங்களின் வாசற்படியிலேயே கிடைப்பதை அவர்கள் உணர்கிறார்கள்.

எனவே, அவர்கள் முயற்சி எடுத்து, வெற்றியை நோக்கி செல்வதில் துணிச்சல் மிக்கவர்களாய் இருக்கும்போது, அவர்களுக்கு வெற்றி கிடைக்கிறது” என்றுள்ளார் செளரவ் கங்குலி.

கங்குலி, தனது கருத்திற்கு உதாரணமாக, இந்தியாவின் ரிஷப் பன்ட் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரை குறிப்பிட்டுள்ளார்.