பாரதியார் தலைப்பாகை காவி நிறத்தில் இருப்பதாக கூறியவர்கள் அவரது கோட் பச்சை நிறத்தில் இருப்பது குறித்து கேள்வி எழுப்பாதது ஏன் ?  என மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாகை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்த கடேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன், சுவாமி தரிசனம் மேற்கொண்டுவிட்டு, கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒவ்வொரு தேர்வு முடிவுகள் வரும் போதும் தோல்வியடைந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக உள்ளது. நீட் தேர்வு முடிவால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகள் குடும்பத்துக்கு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். அதே சமயம் இது போன்ற தற்கொலையை ஆதரிக்கக்கூடாது. மாணவர்களுக்கு மன வலிமையை ஏற்படுத்த வேண்டும்.

பாரதியார் தலைப்பாகை காவி நிறத்தில் இருப்பதாக கூறியவர்கள் அவரது கோட் பச்சை நிறத்தில் இருப்பது குறித்து கேள்வி எழுப்பாதது ஏன் ? கெயில் திட்டத்தை விவசாயிகள் எதிர்ப்பது தவறானது. திட்டத்தை கொண்டு வந்தது திமுக – காங்கிரஸ் கூட்டணி. தற்போது அவர்கள் அதனை வேண்டுமென்றே எதிர்கின்றனர். 12 ஆண்டுகளுக்கு முன்பு தமிழை கட்டாயமாக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது தமிழே தெரியாத ஓர் இளைஞர் சமுதாயம் உருவாகி வருகிறது. இந்தியை விருப்ப பாடமாக எடுக்க மட்டுமே கூறப்பட்டது. ஆனால் அதனை புரிந்துக்கொள்ளாமல், எதிர்க்கட்சிகள் பிரச்சனையை ஏற்படுத்த முயன்றனர். அதனை மத்திய அரசு சரியான கோணத்தில் கையாண்டது.

மயிலாடுதுறை – தரங்கம்பாடி ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும். அதே வேளையில் வேதாரண்யத்தில் உப்பு தொழிலுக்கு பயன்படும் வகையில் ரயிகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.