பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற அவகாசம் தராதது ஏன்? உச்சநீதி மன்றம்

டில்லி,

ழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற மத்திய அரசு அறிவித்தபடி அவகாசம் தராதது ஏன்? என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 8ந்தேதி திடீரென பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. கள்ள நோட்டுகளை ஒழிக்கவும் கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வரவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்ததாக அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து பழைய பணத்தை மாற்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. டிசம்பர் 30ந்தேதிக்குள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும், மாற்ற தவறியவர்கள் மார்ச் 31ந் தேதி வரை ரிசர்வ் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவித்தது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி, பழைய பணத்தை மாற்ற முடியாது என்று அறிவித்துவிட்டது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்த விசாரணையின்போது, உச்ச நீதி மன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்வி விடுத்தனர்.

டிசம்பர் 30ம் தேதிக்குள் பழைய ரூபாய் நோட்டு மாற்ற முடியாதவர்களுக்கு தனி சலுகை வழங்காதது ஏன்?

ஏற்கனவே அறிவித்தபடி, மார்ச் 31 ம் தேதி வரை பழைய நோட்டுகளை மாற்ற அனுமதிக்காதது ஏன்?

மார்ச் 31 வரையிலான கால அவகாசத்தை குறைத்தது ஏன்?

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இங்குள்ளவர்களுக்கு ஏன் வாய்ப்பு தரப்பவில்லை

என கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 11ந் தேதிக்கு ஒத்திவைத்தது.