சுஜித்தின் உடல் காண்பிக்கப்படாதது ஏன்? ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: 

ழ்துளைக் கிணற்றில் சிக்கி 5 நாட்களாக மீட்புபணி நடைபெற்ற வந்த நிலையில்,  பிறகு சடலமாக மீட்கப்பட்ட குழந்தை சுஜித்தின் உடலை, பொதுமக்களுக்கு காண்பிக்காதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.

இந்த நிலையில், அது தொடர்பாக இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தவர் கூறியதாவது,

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் 600க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். சுஜித்தை உயிரோடு மீட்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அனைவரும் ஒரு நிமிடம் கூட தொய்வின்றி பணியாற்றினார்கள்.

குழந்தையை மீட்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு களத்தில் பணியாற்றியவர்களின் திறனை சந்தேகிப்பது சரியான எண்ணம் இல்லை. ஆனால் மீட்புப் பணியின் போது, குழந்தை விழுந்த இடத்தில் இருந்து  துர்நாற்றம் வீசியதால்தான், மீட்புப் பணிகளை நிறுத்திவிட்டு, சுஜித் உடல் மீட்கப்பட்டது. அதுவும் பேரிடர் மீட்புக் குழுவின் வழிமுறைப்படியே சுஜித் உடல் மீட்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து ஊடகங்களில், சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள எழுந்துள்ளன. சுஜித்தை மீட்க அனைத்து தரப்பினரும் கடுமையாக  உழைத்தும், விமர்சனங்கள் எழுப்புவது களப்பணியாளர்களை கவலை அடையச் செய்யும் என்றார்.

மேலும், சுஜித்தை தன்னால் மீட்க முடியும் என்று லக்னோவை சேர்ந்த ஒருவர் கூறினார். இதனால், அவருக்கு  விமான டிக்கெட் எடுத்துக் கொடுக்கப்பட்டது என்று கூறியவர், மனிதர்களால் எடுக்க முடியும் அனைத்து முயற்சி களும் சுஜித் விவகாரத்தில் எடுக்கப்பட்டது. மீட்புப் பணியில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

அதையடுத்து,  மீட்கப்பட்ட சுஜித்தின் உடல் ஊடகங்களுக்கு ஏன் காண்பிக்கவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர், இறந்தவரின்  சடலம் அதற்குரிய மரியாதையோடுதான் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை சொல்லும் முக்கிய விஷயம். அதன்படி, அனைத்து விதிகளுக்கும் உட்பட்டே சுஜித் உடல் மீட்கப்பட்டது. பேரிடர் மீட்புப் படையின் வழிமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளது.

உயிருடன் இருக்கும் போது நடைபெறும் மீட்புப் பணி என்பது வேறு, சடலமாக மீட்கும் போது அதே மீட்புப் பணி மாறுபடும் என்று விளக்கம் அளித்தவர், விபத்து, போர், பேரிடர் போன்றவற்றில் உயிரிழந்தவர்களின் உடல்களை காட்சிப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகள் தான் பின்பற்றப்பட்டுள்ளது.

அதாவது, இதுபோன்று மரணம் அடைந்தவர்களின் உடல்களை காட்சிப்படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகளுக்கு எதிரானது.

இந்த விவகாரத்தில், தவறான தகவலையோ, குற்றச்சாட்டையோ சுமத்த வேண்டாம். பேரிடர் முயற்சிகளுக்கு ஆன செலவு குறித்து வரும் தகவல்கள் அனைத்தும் தவறானது.பேரிடர் மீட்பு முயற்சியின் போது பணம் ஒரு பொருட்டல்ல, மீட்பு பணியே முக்கியம்”.

இதற்கு முன்பு, கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை காட்சிப்படுத்தியதால் உலக அளவில் கடுமையான விமரிசனங்களை எதிர்கொள்ள நேரிட்டது. அதன் பிறகு இது பற்றி விதிமுறை உருவாக்கப்பட்டது. அதன்படியே குழந்தை சுஜித்தின் உடல் ஊடகங்களுக்கு காட்சிப்படுத்த வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.