டில்லி:

யாருக்கு வாக்களித்தோம் என்று வாக்காளர் அறியும் வகையில் அத்தாட்சி ரசீது கொடுக்கும் வாக்குப்பதிவு எந்திரத்தை ஏன் குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்த முடியாது என்று தேர்தல் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த எந்திரத்தை பயன்படுத்த மீண்டும் மன்னிப்பு கோரினால் நீதிமன்றம் கட்டாயப்படுத்த நேரிடும் என்று கருத்து தெரிவித்துள்ளது. மோகித் சிங் என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவில் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் ஆஜராகி வாதாடி வருகிறார்.

குஜராத் சட்டமன்ற தேர்தலில் ரசீது கொடுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை குஜராத் உயர்நீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தற்போது தேர்தல் கமிஷனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தலைமை நீதிபதி கேஹர், நீதிபதி சந்த்ராசவுத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் கூறுகையில்,‘‘ 87 ஆயிரம் எந்திரங்கள் கைவசம் உள்ளது. ஏன் அதை பயன்படுத்த முடியாது’’ என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு தேர்தல் கமிஷன் தரப்பில் பதில் கூறுகையில்,‘‘ 87 ஆயிரம் எந்திரங்களும் வேலை செய்கிறது. ஆனால் அதில் சிலவற்றில் சில குறைபாடுகள் உள்ளது’’ என்றனர்.

‘‘இது மீண்டும் மன்னிப்பு கேட்பது போல் உள்ளது. எங்களை கட்டாயப்படுத்த வைத்து விட வேண்டும். எங்களால் உத்தரவு மூலம் கட்டாயப்படுத்த முடியும். இது தொடர்பாக 4 வாரத்திறகுள் பதில் அளிக்க வேண்டும்’’ என்று நீதிபதிகள் கூறினர்.