மதுரை:

திருமணம் என்பது எனது தனிப்பட்ட விவகாரம். இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என தெரியவில்லை என இரோம் சர்மிளா கேள்வி எழுப்பினார்.

மேலும், தனது.  திருமணத்திற்காக கையெழுத்திடவிருக்கும் மூன்று சாட்சிகளையும் மர்ம நபர்கள் மிரட்டியிருப்பது வேதனையளிக்கிறது’  என்று மனித உரிமைப் போராளியும் மணிப்பூரைச் சேர்ந்தவருமான இரோம் ஷர்மிளா வேதனை தெரிவித்தார்.

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இரோம் ஷர்மிளா பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

இந்திய தேசத்துக்காக சட்டமியற்றிய அண்ணல் அம்பேத்கர் போற்றுதலுக்குரியவர். அவரது சட்டம் மதிக்கப்பட வேண்டும். குறிப்பாக மனிதனே மனித கழிவுகளை அகற்றுவதற்கு எதிரான சட்டத்தை இந்தியா மற்றும் தமிழகத்தில் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதுபோன்ற நடைமுறை இருப்பதை கக்கூஸ் ஆவணப்படத்தில், சுட்டிக்காட்டிய அப்படத்தின் இயக்குநர் திவ்யபாரதி மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டிருப்பது வேதனைக்குரியது. திவ்யபாரதிக்கு தொடர்ந்து ஆதரவு தருவேன்.

சாதாரண விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் இந்தப்படத்தை அனைத்து இடங்களிலும் ஒளிபரப்ப வேண்டும்.

தமிழகம் மற்றும் இந்தியாவில் சாதிய கட்டமைப்புகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும். அதற்காக அனைவரும் இணைந்து போராட வேண்டும்’

மேலும் வரும் 16ந்தேதி ‘ஆகஸ்ட் 16 ஆம் தேதி கொடைக்கானலில் எனது திருமணம் நடைபெறும். அதற்குப் பிறகும் கொடைக்கானலிலேயே தங்கி இருக்க முடிவு செய்து உள்ளேன் என்றார்.

திருமணத்திற்கு பிறகும்,  தொடர்ந்து மனித உரிமைகளைக் காப்பதற்காகப் போராடுவேன்’.

இவ்வாறு அவர் கூறினார்.

மணிப்பூர் மாநிலத்தில் ஆயுத சட்டத்தை எதிர்த்து பல ஆண்டுகளாக பட்டினி போராட்டம் நடத்தியவர் இரோம் சர்மிளா. “மணிப்பூர் போராளி” என்றும் “இரும்புப் பெண்மணி” என்றும் அம்மாநில மக்களால் அழைக்கப்படுகிறார். தற்போது தமிழகத்தில் கொடைக்கானலில் வசித்து வருகிறார்.