இந்தியக் கிரிக்கெட் என்றாலே, அது முக்கியமான ஒரு உச்ச சாதிக்கும், இன்னசில உயர்சாதிகளுக்கும் மட்டுமே உரித்தானது என்ற நிலைதான் பன்னெடுங்காலமாக. அதேசமயம், இந்திய கிரிக்கெட் அணியில், தொடர்ச்சியாக சில முஸ்லீம்களும் இடம்பெற்று வருவர்.

மேலும், இந்தியக் கிரிக்கெட்டில், மும்பையின் ஆதிக்கமா? அல்லது டெல்லியின் ஆதிக்கமா? என்ற போட்டியும் எப்போதும் உண்டு.

இந்தவகையில், ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து வந்த மகேந்திரசிங் தோனி, இந்திய கேப்டனாக ஆனது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. இதற்கு நெடுங்காலம் முன்னதாக, ஹரியானா சிங்கம் கபில்தேவ், இந்திய கிரிக்கெட்டின் கேப்டனாக மாறி, அதன் முகத்தையே மாற்றியதும் தனி வரலாறு.

மேலும், மன்சூர் அலி பட்டோடி மற்றும் முகமது அசாருதீன் போன்றவர்கள், இந்திய அணிக்கு கேப்டனாக இருந்ததும் இன்னொரு சரித்திரம்!

இந்தியக் கிரிக்கெட்டை, தீண்டாமை விளையாட்டு என்று விமர்சிப்போர் பலர் உண்டு. தமிழ்நாட்டிலிருந்து இந்திய அணியில் இடம்பெற்ற கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், லட்சுமிபதி பாலாஜி, ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் மற்றும் முரளி கார்த்திக் போன்ற பலரும் உயர்ஜாதியினர்தான்.

கிரிக்கெட்டை உயிராக நேசிக்கும் எத்தனையோ இதர சாதி இளைஞர்கள், தமிழகத்தில் இருந்தாலும்கூட, அவர்கள், சாதிய ஆதிக்கத்தை மீறி மேலே வருவதெல்லாம் அவ்வளவு சாதாரண விஷயமல்ல. அத்தகையை நிகழ்வுகள் அதிசயமானவேயே!

அந்த அதிசயம்தான் தற்போது நிகழ்ந்துள்ளது. சேலத்தைச் சேர்ந்த நடராஜன் என்ற உயர்ஜாதியைச் சேராத தமிழன், ஐபிஎல் போட்டிகளில் தன்னை நிரூபித்து, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய அணியில் இடம்பெற்று பலரின் கவன‍த்தையும் கவர்ந்தார்.

அமீரகத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில், அதிகளவிலான யார்க்கர் பந்துகளை துல்லியமாக வீசிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் இவர். இதனால், ‘நடராஜன் எனது ஹீரோ’ என்று கபில்தேவ் இவரைப் புகழ்ந்து தள்ளினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணியில் இடம்பெற்றாலும், முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பளிக்கப்படவில்லை நடராஜனுக்கு. அதேசமயம், வாய்ப்பளிக்கப்பட்ட சிலர் சொதப்ப, மூன்றாவது போட்டியில் களமிறக்கப்பட்டார்.

துவக்க ஓவர்களிலேயே, ஆஸ்திரேலியாவின் ஓபனிங் பேட்ஸ்மேன் மார்னஸை இன்சைட் எட்ஜ் முறையில் பெளல்டு ஆக்கி, இந்திய அணிக்கு முதல் பிரேக்த்ரூ கிடைக்கச் செய்தார். அதையடுத்து, கடைசி ஓவர்களில் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்த ஆஷ்டன் ஆகரையும் அவுட்டாக்கினார். 10 ஓவர்கள் வீசி 70 ரன்களை வழங்கினாலும், ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிக்கெதிராக அதன் சொந்த மண்ணிலேயே, சிறப்பாக செயல்பட்டு, இந்திய வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய சமூகங்களுள் ஒன்றில் பிறந்து, இந்திய தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று, தற்போது கவனம் கவர்ந்திருக்கும் நடராஜனை, தமிழகத்தின் சமூக உணர்வாளர்கள் பலரும் கொண்டாடுகின்றனர் என்பது உண்மையே..!