அள்ளிக் கொடுக்கும் ராஜ்யசபா உறுப்பினர் பதவி – முட்டிமோதுவது இதற்காகத்தான்..!

அரசியல்வாதிகளால் மிகவும் விரும்பப்படும் பதவிகளில் ஒன்றான ராஜ்யசபா உறுப்பினர் பதவி என்பது கோடி கோடியாக சம்பாதிக்கும் வழிவகைகளை ஏற்படுத்தி தருகிறது என்ற விபரங்கள் வெளியாகியுள்ளன.

தேசிய தேர்தலை கண்காணிக்கும் அமைப்பான ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு(ஏடிஆர்), ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான வருவாய் வாய்ப்புகள் மற்றும் அவர்கள் எப்படி சம்பாதிக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வுசெய்து தகவல்களை வெளியிட்டுள்ளது.

அந்த அமைப்பினுடைய ஆய்வு தரும் தகவல்கள்:

ஊதியம் பெறக்கூடிய இயக்குநர் பதவிகள், ஊதியம் பெறக்கூடிய நிரந்தர நடவடிக்கைகள், கட்டுப்படுத்தும் தன்மைகொண்ட பங்குதாரராக இருத்தல், கட்டணம் பெறும் கன்சல்டன்சியாக செயல்படுதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தாங்கள் வருவாய் ஈட்டுவதாக மொத்தம் 89(41.8%) உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், மொத்த உறுப்பினர்களில் 124 பேர்(58.2%), மேற்கண்ட வழிமுறைகளிலிருந்து பண பலன்களைப் பெறுகிறார்களா? என்பது குறித்தான விபரங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை.
மொத்த உறுப்பினர்களில் 24 பேர்(11.3%) ஊதியம் பெறுகின்ற இயக்குநர் பதவிகளை வகிப்பதன் மூலமாக தாங்கள் பண பலன்களை பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

ஊதியம் வாங்கும் இயக்குநர் பதவியை வகிப்பதன் மூலமாக மிக அதிகளவு ஊதியம் பெறும் உறுப்பினராக கர்நாடகத்திலிருந்து மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் மூலமாக உறுப்பினரான குபேந்திர ரெட்டி கருதப்படுகிறார். இவரின் ஆண்டு வருமானம் ரூ.40.68 கோடி.

இவருக்கு அடுத்து பாரதீய ஜனதாவின் ராஜீவ் சந்திரசேகர் வருகிறார். இவரின் ஆண்டு வருவாய் ரூ.7.03 கோடி. மூன்றாம் இடத்தில் கேரளாவின் ஐஎம்யுஎல் உறுப்பினர் அப்துல் வஹாப் வருகிறார். இவரின் ஆண்டு வருவாய் ரூ.3.34 கோடி.

தொடர்ச்சியான ஊதியம் பெறும் நடவடிக்கைகளின் மூலம் பண பலன்களைப் பெறுவதாக மொத்தம் 30 ராஜ்யசபா உறுப்பினர்கள்(14.1%) தெரிவித்துள்ளனர். இந்த வகையில் அதிகமாக சம்பாதிக்கும் முதல் நபராக பாரதீய ஜனதாவின் மகேஷ் போதார்(ஜார்க்கண்ட்) கருதப்படுகிறார். அவரின் ஆண்டு வருவாய் ரூ.3.18 கோடிகள்.

அடுத்து பா.ஜ.நியமன உறுப்பினர் மேரி கோம் (ரூ.2.50 கோடிகள்), நியமன உறுப்பினர் ஸ்வபன் தாஸ்குப்தா (66.60 லட்சம்) ஆண்டு வருமானமாக பெறுகின்றனர்.

அடுத்து, மொத்த உறுப்பினர்களில் 44 பேர்(20.7%), கட்டுப்படுத்தும் பங்குதாரர்களாக இருப்பதன் மூலம் பண பலன்களைப் பெறுகின்றனர். இந்த வகையில் பீகார் மாநில பாரதீய ஜனதா உறுப்பினர் ரவீந்திர கிஷோர் சின்ஹா(பங்கு மதிப்பு ரூ.747 கோடிகள்) முதலிடத்திலும், காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் மனு சிங்வி இரண்டாமிடத்திலும் (பங்கு மதிப்பு ரூ.386 கோடிகள்), சுயேட்சை உறுப்பினர் காக்டே சஞ்சய் தத்தாத்ரேயா மூன்றாமிடத்திலும் (பங்கு மதிப்பு ரூ.262 கோடிகள்) வருகின்றனர்.

வெறும் 2 உறுப்பினர்கள்(0.9%) மட்டுமே தாங்கள் கட்டண கன்சல்டன்சி மூலமாக பண பலன்களைப் பெறுவதாக கூறியுள்ளனர். இவர்களில் கேடிஎஸ் துல்சி என்பவர் ரூ.27.50 லட்சங்களும், பா.ஜ.வின் விகாஸ் ஹரிபாவு மகாத்மே ரூ.5.6 லட்சங்களும் சம்பாதிக்கின்றனர்.

அதேசமயம், மொத்தம் 40 உறுப்பினர்கள்(18.8%) தொழில்முறையிலான செயல்பாடுகளின் மூலமாக பண பலன்களைப் பெறுவதாக கூறியுள்ளனர். இவர்களில் முதல் 3 பேரும் வழக்கறிஞர்கள். முதலிடத்தில் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் மனு சிங்வி (ரூ.177 கோடிகள்), இரண்டாமிடத்தில் அதேக் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம் மற்றும் மூன்றாமிடத்தில் துல்சி ஆகியோர் உள்ளனர்.

ராஜ்ய சபையின் 104 உறுப்பினர்கள் ரூ.1 கோடிக்கும் மேலாக சொத்து மதிப்பு வைத்துள்ளனர். ஆனால், அதுதொடர்பாக அவர்கள் பிரகடனம் செய்யவில்லை.

ராஜ்யசபா உறுப்பினர்களிலேயே அறிவிக்கப்பட்டபடி பார்த்தால், முதல் பணக்காரர் என்ற இடத்தில் இருப்பவர் காங்கிரசின் டி.சுப்பராமி ரெட்டி. இவரின் சொத்து மதிப்பு ரூ.422.44 கோடிகள். இரண்டாமிடத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் சி.எம்.ரமேஷ் (ரூ.258.20 கோடிகள்), மூன்றாமிடத்தில் மறைந்த அருண்ஜெட்லி(ரூ.111.42 கோடிகள்) மற்றும் நான்காமிடத்தில் அம்பிகா சோனி(105.82 கோடிகள்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேசமயம், ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழும் கணிசமான உறுப்பினர்கள் தங்களின் சொத்து விபரங்களை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், மொத்தம் 17 உறுப்பினர்கள் எந்த வகைப்பாட்டின் கீழும், தாங்கள் பெறுகின்ற பண பலாபலன்களை வெளிப்படுத்தவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

ஆர்ஜேடி கட்சியின் மிசா பாரதி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டோலா சென், ஐக்கிய ஜனதாதளத்தின் மகேந்திர பிரசாத், காங்கிரசின் ராஜ்மணி படேல், பா.ஜ.வின் ராகேஷ் சின்ஹா ஆகியோர் இந்த விபரங்களை வெளியிடாதவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இவர்கள் அனைவருமே இந்த விஷயத்தில் ஒற்றுமையை பேணி வருகின்றனர்.

கர்நாடகத்தின் மதசார்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகள் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை நீண்டகாலமாகவே விற்பனை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 6 ஆண்டுகளுக்கு எந்தக் கவலையும் இல்லாத, அரசு கவிழ்ந்தாலும் பாதிக்கப்படாத பதவியாக உள்ள இந்த ராஜ்யசபா பதவியில் இவ்வளவு வருவாய் வாய்ப்புகள் இருப்பதால்தான், அப்பதவியைப் பெறுவதற்கு பலரும் முட்டிமோதி லாபி செய்து வருகின்றனர் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்!

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-