வீரர்களுக்கு குண்டு துளைக்கும் வாகனம்; ஆனால் பிரதமருக்கு 8400 கோடியில் சிறப்பு விமானமா? – ராகுல் காந்தி விளாசல்!

புதுடெல்லி: நாட்டைப் பாதுகாக்கும் வீரர்களின் பாதுகாப்பில் அக்கறையில்லாமல், ரூ.8400 கோடிக்கு சிறப்பு விமானம் வாங்குவதில்தான் பிரதமர் மோடிக்கு அக்கறை என்று சாடியுள்ளார் ராகுல் காந்தி.

“நமது வீரர்கள் குண்டு துணைக்கக்கூடிய டிரக்குகளில் எல்லைகளில் பயணம் செய்கிறார்கள். ஆனால், பிரதமரோ தனது பயணத்திற்கான ரூ.8400 கோடி மதிப்பிலான விமானத்தை வாங்குகிறார். இது ஏற்புடையதா?” என்று கேட்டுள்ளார் ராகுல் காந்தி.

இதுதொடர்பாக, சில இந்திய வீரர்கள் பேசிக்கொள்வதாக உள்ள வீடியோவையும் வெளியிட்டுள்ளார் ராகுல் காந்தி.

“குண்டு துளைக்காத வாகனங்களே பாதுகாப்பற்றவையாக இருக்கும் நிலையில், நாம் குண்டு துளைக்கும் வாகனத்தில் பயணம் செய்கிறோம். அவர்கள் நமது வாழ்க்கையுடன் விளையாடுகிறார்கள். நாம் நமது வாழ்க்கையை வீணாக்குகிறோம்.

இதுவொரு மோசமான ஏற்பாடு. நமக்கு மிக மோசமான வாகனம் தரப்பட்டுள்ளது. மூத்த அதிகாரி குண்டு துளைக்காத வாகனத்தில் செல்கையில், நாம் குண்டு துளைக்கும் பாதுகாப்பற்ற வாகனத்தில் பயணம் செய்கிறோம்” என்று அந்த வீரர்கள் பேசிக் கொள்கின்றனர்.

ஆனால், இந்த வீடியோ நம்பகத்தன்மை வாய்ந்ததா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.