பீகாரில் சொதப்பிய ராஷ்ட்ரிய ஜனதாதளக் கூட்டணி

பாட்னா: கூட்டணி விஷயத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் பொறுப்பை ஏற்றிருந்த லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் முதிர்ச்சியற்று செயல்பட்டதாலும், கூட்டணிக் கட்சிகளுடன் சரியான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளாததாலும்தான், பீகாரில் மிக மோசமான தோல்வியை காங்கிரஸ் கூட்டணி பெற்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக மேலும் கூறப்படுவதாவது; மிகவும் நெருக்கடியான காலங்களில், தேஜஸ்வி யாதவை கட்சிக்காரர்களால் பார்க்கவே முடியவில்லை. தன் தந்தை சிறையில் இருக்கும் நிலையில், அவர்தான் அனைத்தையும் முன்னின்று நடத்தியிருக்க வேண்டும்.

பத்திரிகையாளர்களை சரியான நேரத்தில் சந்திக்கவில்லை. தொகுதிகள் மற்றும் வேட்பாளர் விபரங்கள் அறிவிக்கும்போது, கூட்டணி கட்சிகள் உடன் இருக்கவில்லை.

மேலும், பெகுசராய் தொகுதியில் போட்டியிட்ட மாணவர் அமைப்பு தலைவரான கண்ணையா குமாரை ஆதரித்திருக்கலாம். ஆனால், எல்லாமே முதிர்ச்சியின்றியே நடைபெற்றன.

மாறாக, பாரதீய ஜனதாவோ அனைத்தையும் திட்டமிட்டு மற்றும் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டது. நாட்டில் நிலவும் முக்கியப் பிரச்சினைகளை திசைதிருப்பும் விதமாக, தேசப்பற்று என்பதை கொண்டுவந்து, வாக்காளர்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாக திசை திருப்பியது.

எனவே, இத்தகைய காரணங்களால்தான், பீகாரில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது காங்கிரஸ் கூட்டணி என்கின்றனர்.