ரஷ்யாவில் மட்டும் ஏன் இப்படியான கொண்டாட்டம்..? – ஒரு வரலாற்று பயணம்

ரஷ்யாவில், அடுத்த மாதம்(மே) நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த, இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்த 75வது ஆண்டு நிறைவு (பவள விழா) கொண்டாட்டம், கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்ற செய்திகள் ஏற்கனவே வெளியான ஒன்றுதான்.

இரண்டாம் உலகப்போரின் 60வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டமும் ரஷ்யாவில் விமர்சையாக அனுசரிக்கப்பட்டது. அந்த விழாவில், அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்(ஜுனியர்) உள்ளிட்ட பல முக்கிய உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டாம் உலகப் போர் தொடர்பான நினைவு விழாக்கள், ரஷ்யாவில் மட்டும் ஏன் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன என்ற கேள்விகள் எழுவது இயல்வே!

இரண்டாம் உலகப்போரில் ரஷ்யாவும் பங்குபெற்றது என்ற தகவல் நம்மில் பலருக்குத் தெரிந்திருந்தாலும், அந்தப் பங்களிப்பின் தன்மை எத்தகையது என்ற விபரம் நம்மில் அதிகம் பேருக்குத் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம‍ே! ஏனெனில், அதுதொடர்பாக செய்யப்படும் இருட்டடிப்பு அப்படியானது!

சாதாரணமாக, இரண்டாம் உலகப்போர் குறித்து பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம்பெற்ற விஷயங்கள் முதற்கொண்டு, பல்வேறு ஊடகச் செய்திகள் வரை, ஜெர்மனி – சோவியத் யூனியன் இடையிலான போர்க்களத்தின் தன்மை குறித்து இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் உண்மையானவையே. கம்யூனிஸ பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்கள் மற்றும் சிலபல இணையதள தகவல்கள் ஓரளவு நிஜத்தைச் சொல்கின்றன.

தமிழ் சேனல்கள் சிலவற்றில், அவ்வப்போது மொழிமாற்றம் செய்யப்பட்ட இரண்டாம் உலகப்போர் தொகுப்பு காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. அவற்றில், நாம் பார்த்தவரையில், ஜெர்மனிக்கும், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கும் நடைபெற்ற சண்டைதான் விவரிக்கப்பட்டு, மிகவும் முக்கியத்துவம் மற்றும் பயங்கரமான ஒன்றாக காட்டப்படுகிறது.

ஆனால், ஐரோப்பாவின் மேற்கு போர்முனையைவிட, கிழக்குப் போர்முனை (சோவியத் யூனியன் – ஜெர்மனி) மிக மிக நாசகரமானதாகவும் பயங்கரமானதாகவும் இருந்தது.

மேற்கு ஐரோப்பாவில், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் நார்வே உள்ளிட்ட பல நாடுகளை ஜெர்மனி கைப்பற்றியது உண்மைதான். ஆனால், அவையெல்லாம் மிக எளிதான போர் நடவடிக்கைகள். ஹிட்லர், அவற்றுக்காக பெரியளவில் மெனக்கெடவில்லை மற்றும் தன் சக்தியை சிறியளவிலேயே பயன்படுத்தினார். ஜெர்மனிக்கு நிகரான ஆயுதங்களை வைத்திருந்த பிரான்ஸ், சொல்லிக்கொள்ளும் வகையில், எந்த எதிர்ப்பையும் காட்டாமல் சரணடைந்தது. பிரான்ஸ் ராணுவம் எதிர்பார்த்த வழியில், ஜெர்மானிய ராணுவம் நுழையாமல், எதிர்பாராத வழியில் திடீரென பிரான்ஸ் நாட்டிற்குள் நுழைந்ததே எளிதான சரணடைதலுக்கான காரணமாக சொல்லப்பட்டது. பலர் இதை ஒரு மொக்கை காரணமாகவும் நினைக்கலாம். ஏனெனில், போராட்ட குணம் கொண்டவர்களுக்கு இதெல்லாம் ஒரு காரணமில்லை என்பதால். ஜெர்மனியிடம், பிரான்ஸ் வீழ்வதென்பது வரலாற்றில் அது முதல்முறையுமல்ல!

பாரிஸ் வீழ்ந்த பிறகு அங்கே சென்ற ஹிட்லர்

பல்வ‍ேறு நாடுகளைக் கைப்பற்றி, அதன்மூலமாக ஒன்றுதிரட்டப்பட்ட ஹிட்லரின் பலம், முக்கால்வாசிக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டது எங்கெனில்,  சோவியத் யூனியனுடன் அவர் மேற்கொண்ட போரின்போதுதான். ஐரோப்பாவின் கிழக்குப் போர்முனைதான் இரண்டாம் உலகப்போரின் மிகக் கொடூரமான ஒரு போர்க்களம்! இதுவரையில், அப்படியான ஒரு போர்க்களம் உலக வரலாற்றில் ஏற்படவில்லை என்பதையும் கூறித்தான் ஆக வேண்டும்!

ஹிட்லரின் ஆயுத தொழிற்சாலைகளில், அமெரிக்க முதலாளிகளின் பணமும் இருந்ததாக சில ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. ஒருவகையில், ஹிட்லர், சிலவகை முதலாளிமார்களால் திட்டமிட்டு ஊட்டி வளர்க்கப்பட்டார் என்ற கருத்தும் வலுவாக உண்டு.

பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளை வீழ்த்தியப் பிறகு, பிரிட்டனைக் கைப்பற்றுவதற்கு ஹிட்லர் சில முயற்சிகளை மேற்கொண்டார் என்பது முக்கியமான நிகழ்வுகள்தான். ஆனால், பிரிட்டன் டக்கென சென்றடைய முடியாத ஒரு தீவு நாடாக இருந்தது மற்றும் 2 நூற்றாண்டுகளாக உலகெங்கிலும் தனது காலனியாதிக்க நடவடிக்கைகளின் மூலம், பல சிறந்த போர் அனுபவங்களைப் பெற்றிருந்தது மற்றும் உலகெங்கிலும் கொள்ளையடித்த செல்வம் மற்றும் பல்வேறு தொழில்நுட்பங்களின் உதவியுடன் கட்டமைக்கப்பட்ட ராணுவம் ஆகியவற்றைக் கொண்டிருந்ததால், பிரிட்டன், ஹிட்லரிடம் எளிதாக வீழும் நிலையில் இல்லை.

கடற்போரில் நினைத்ததை சாதிக்க முடியாத ஹிட்லர், முதற்கட்ட வான்போரிலும் பிரிட்டரின் தோல்வியடைந்தார். ஹிட்லரைப் பொறுத்தவரை அது ஆக்ரமிப்புப் போர்; பிரிட்டனைப் பொறுத்தவரை அது தற்காப்புப் போர்!

 

ரஷ்யாவிற்குள் ஆவேசமாக நுழையும் ஜெர்மன் ராணுவம்

ஆனால், தன் முழு முயற்சியை பிரிட்டன் விஷயத்தில் செலுத்தும் முன்னதாகவே, ஹிட்லரின் பிரதான கவனம், கிழக்குப் பக்கம் திரும்பிவிட்டது அல்லது அப்போதைய பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலால் திருப்பிவிடப்பட்டது. ஹிட்லரின் பிரிட்டனைக் கைப்பற்றும் ஆவல், இப்படி எதிர்பாராமல் நிறுத்தி வைக்கப்படுமென அப்போதைய சோவியத் யூனியன் அதிபர் ஸ்டாலினும் எதிர்பார்க்கவில்லை.

உண்மையில், போரை எதிர்கொள்ள அப்போதைக்கு, சோவியத் யூனியன் தயாராகவே இருக்கவில்லை. பிரிட்டனுடன் ஒப்பிடுகையில், சோவியத் யூனியன் அதற்கு முன்பு உலக வல்லரசாக இருந்திருக்கவில்லை. அதனிடம் காலனியாதிக்க செல்வமும் கிடையாது. உலகளவிலான பல்வேறு போர் அனுபவங்களும் கிடையாது. பரப்பளவில் பெரியது என்ற அனுகூலம் மட்டுமே அதனிடம் இருந்தது.

1924ம் ஆண்டு விளாடிமிர் லெனின் இறந்த பிறகு, தலைமைப் பொறுப்பேற்ற ஸ்டாலின், ரஷ்யாவின் தொழில் மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் தீவிர கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். தனது நாட்டை இயந்திர மயமாக்குவதும் அவருக்கு மிக முக்கியமான கடமையாக இருந்தது. எனவே, மன்னராட்சி பின்னடைவிலிருந்து சிறிதுசிறிதாக மீண்டு வந்துகொண்டிருந்த அன்றையப் பொதுவுடைமை சோவியத் யூனியன், ஹிட்லரின் ராணுவத்தை எதிர்த்து நிற்கும் நிலையில் இருக்கவில்லை. பல்வேறு வகைப்பாடுகளில் பலவீனமான ஒன்றாகவே இருந்தது.

அதற்கு முந்தைய ஆண்டுகளில், ஃபின்லாந்து என்ற ஒரு சாதாரண நாட்டுடன் நடைபெற்ற போரில்கூட, சோவியத்தால் தீர்க்கமான வெற்றியைப் பெற முடியவில்லை. இதுதான் அப்போது சோவியத் ராணுவத்தின் நிலை!

ஹிட்லருக்கு எதிராக, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் ஒரு பாதுகாப்பு உடன்படிக்கையை செய்துகொள்ள ஸ்டாலின் முயன்றபோதும், அந்நாடுகள் ஒத்துவராத காரணத்தால்(இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?), வேறுவழியின்றி, ஜெர்மனியிடமே, பரஸ்பரம் தாக்காத அமைதி உடன்படிக்கையை கையெழுத்திட்டுக் கொண்டது சோவியத் யூனியன். ஆனால், அந்த உடன்படிக்கைக்கு அற்ப ஆயுசே இருந்தது என்பது வரலாற்றில் தெளிவாக காட்டப்பட்ட ஒன்று! அதை ஹிட்லரே எளிதாக மீறிவிட்டார்.

ஸ்டாலின் எதிர்பார்க்காத வகையில், ஒரு ஆண்டு முன்பாகவே (1941), சோவியத் யூனியன் மீது பாய்ந்தார்!

ஐரோப்பாவின் கிழக்குப் போர் முனையில், இறுதி வெற்றிபெற்றது சோவியத் யூனியன் என்றாலும், அதன்பொருட்டு, அந்நாடு சந்தித்த இழப்புகள் மிகக் கொடுமையானவை. ஏறக்குறைய 2 கோடி மக்கள், பல்லாயிரம் கிராமங்கள் மற்றும் ஏராளமான நகரங்கள், பல்லாயிரம் மைல் நீளம் கொண்ட ரயில் பாதைகள் உள்ளிட்ட மிகப் பிரமாண்டமான இழப்புகளை சோவியத் யூனியன் சந்தித்தது. இப்போர்முனையில், ஹிட்லரும், தனது லட்சக்கணக்கான படை வீரர்களை இழந்ததோடு, இறுதியாக தனது ஆயிரம் ஆண்டு கனவுப் பேரரசையும், தன் உயிரையும் இழக்க வேண்டியிருந்தது.

இப்போர் முனைதான் மாபெரும் கொடூரங்கள் அர‍ங்கேறிய போர்முனை. சோவியத் யூனியன் வீழட்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்ததாக குற்றம் சாட்டப்படும் மேற்கின் முதலாளித்துவ நாடுகள், ஹிட்லர் தன் பலத்தையெல்லாம் திரட்டி ரஷ்யாவை திணறடித்துக் கொண்டிருந்தபோது, மேற்கே ஒரு பெரிய போரைத் தொடங்காமல் மெளனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன.

சோவியத் யூனியன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டும், அக்கோரிக்கை சப்பைக் காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. மேலும், ஹிட்லரின் மூலமாக, சோவியத்தை வீழ்த்த வேண்டும் மற்றும் அதன்பிறகு நாம் எப்படியாவது ஹிட்லரை வீழ்த்தி விடலாம் என்பதே அவர்களின் மிகப்பெரிய திட்டமாக இருந்தது என்ற குற்றச்சாட்டை இடதுசாரி முகாம்களிலிருந்து எழும் குரல்கள் தொடர்ந்து முன்வைக்கின்றன.

முதலாம் உலகப்போரில் ஜெர்மன் தோற்றபோது, அதன் மண்ணில் எந்த எதிரிப்படை வீரரும் கால் வைத்திருக்கவில்லை. ஆனால், இரண்டாம் உலகப்போரில் ஜெர்மன் தோற்றபோது, அந்நாடு, முற்றிலும் எதிரிகளால் கைப்பற்றப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டிருந்தது. அதற்கு காரணம், ஆரிய இன வெறியர் ஹிட்லர்…!

பெர்லினில், ஜெர்மன் நாடாளுமன்றத்தில் பறக்கவிடப்படும் ரஷ்ய கொடி

பெர்லினைக் கைப்பற்றிய சோவியத்தின் செஞ்சேனை, ஹிட்லரின் தலைநகரில், அவரின் சிதைந்துபோன நாடாளுமன்ற கட்டடமான ரெய்ஸ்டாக்கில்(1000 ஆண்டு கனவுப் பேரரசின் தலைமையிடம்) தனது கொடியைப் பறக்கவிட்டது. போரில் மாபெரும் அழிவை சந்தித்தபோதும், அதன்பிறகு, மிகவும் குறுகிய ஆண்டுகளில் மீண்டெழுந்தது சோவியத் யூனியன்!

இப்போர், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வல்லரசு யுகத்தை முடித்துவைத்து, சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்கா ஆகிய 2 புதிய வல்லரசுகளின் யுகத்தை தொடங்கி வைத்தது. சோவியத் யூனியனை அணுகுண்டு தயாரிக்க விட்டுவிடக்கூடாது என்றெண்ணிய அமெரிக்காவை, 1949ம் ஆண்டே அணுகுண்டு தயாரித்து அதிர்ச்சியடைய வைத்தது ஸ்டாலினின் ரஷ்யா.

கிழக்கு ஐரோப்பாவில், ஹிட்லர் கைப்பற்றிய நாடுகள் அனைத்தும், சோவியத்தின் ஆதிக்கத்தில் வந்தன. இப்போரில், சோவியத்தின் வெற்றிக்கு அந்நாட்டின் ராணுவ வலிமையைவிட, அந்நாட்டு மக்களின் மாபெரும் தியாகம் மற்றும் போராட்ட குணம், ஸ்டாலினின் மாபெரும் மனோ தைரியம் மற்றும் மதிநுட்பம் மற்றும் மோசமான காலநிலை ஆகியவை முக்கிய காரணிகளாக வரிசைப்படுத்தப்படுகின்றன.

ஒரு திட்டமிடப்பட்ட, குறுகியகால, ஒருங்கிணைந்த தாக்குதலின் மூலம் சோவியத்தை எளிதாகக் கைப்பற்றி விடலாம் என்பதே ஹிட்லரின் திட்டமாக இருந்தது. சில ஜெர்மன் ராணுவத் தளபதிகள் இத்திட்டம் ஆபத்தானது என்று எச்சரித்தும்கூட, ஹிட்லரிடம் அபார நம்பிக்கை இருந்தது. மேலும், சோவியத் ராணுவத்தின் பலம் மற்றும் அந்நாட்டு தலைமை, அதன் மக்கள் ஆகியவற்றைப் பற்றி ஒரு தவறான மதிப்பீட்டை ஹிட்லர் கொண்டிருந்தார். ஹிட்லரிடம் வீழ்ந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளைப் போன்று, சோவியத்தின் மனோவலிமையும் டம்மியானது என்று ஹிட்லர் நினைத்ததே அவரின் விரைந்த வீழ்ச்சிக்கு பிரதான காரணம் எனலாம்.

மேற்கு சோவியத் யூனியனிலிருந்த அனைத்து ஆயுத தொழிற்சாலைகளும், ஸ்டாலினின் உத்தரவுப்படி, அப்படியே பெயர்த்து எடுக்கப்பட்டு, ஜெர்மனியால் அணுக முடியாத அளவில் கிழக்கு ரஷ்யாவில் கொண்டுபோய் மறுநிர்மாணம் செய்யப்பட்டன. இதன்மூலம், போருக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களையும், சோவியத்தால் தங்குதடையின்றி உற்பத்தி செய்துகொண்டே இருக்க முடிந்தது. இதை, ஹிட்லர் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை.

சோவியத்திடம் தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த ஹிட்லர், ஒருமுறை இப்படி சொன்னார், “சோவியத்திடம் இவ்வளவு டாங்கிகள் மற்றும் ஆயுத வலிமை இருக்கும் என்று தெரிந்திருந்தால், அப்பக்கம் நான் திரும்பியிருக்கவே மாட்டேன்”.

தனது பேரரசு, 1000 ஆண்டுகள் நிலைத்திருக்கும் என்று கனவுகண்ட ஹிட்லர், மிகக்குறைந்த ஆண்டுகளில், தனது அவசரப் புத்தியாலும், அறிவீனத்தாலும், தனது ஆர்யன் இன மக்களை தேவையின்றி பலிகொடுத்து, அந்நியர்களுக்கு அடிமையாக்கிவிட்டு மாண்டுபோனார். ஆனால், ஆரிய இன வெறியரான ஹிட்லர், தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக தனக்கு தெரிவிக்கப்பட்ட தகவலை, ஸ்டாலின் அவ்வளவு எளிதாக நம்பிவிடவில்லை.

ஸ்டாலின்கிராட் யுத்தக் காட்சி

ஹிட்லரின் மாபெரும் சித்தாந்த எதிரியாக சோவியத் யூனியன் விளங்கியது. எனவே, ஜெர்மனி எப்படியும் தங்கள் மீது பாயும் என்பதை ஸ்டாலின் தெளிவாக உணர்ந்தே இருந்தார்.

இப்போரில், ஏராளமான தியாகங்களை செய்து தனது நாட்டை வெற்றிபெறச் செய்ததோடு மட்டுமின்றி, தனது அபாரமான அரசியல் திறத்தால், அமெரிக்காவுடனும், பிரிட்டனுடனும் சாமர்த்தியமாக பேச்சுவார்த்தை நடத்தி, மிகப்பெரும் நிலப்பகுதிகளை சோவியத்தின் ஆதிக்கத்திற்குள் கொண்டுவந்தார் ஸ்டாலின் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. எளிதில் உடைக்க முடியாத, ஒரு மாபெரும் வல்லரசை தனது மரணத்தின்போது விட்டுச் சென்றார் அவர்!

இரண்டாம் உலகப்போரில், சோவியத் வீரர்களின் மனவலிமையைப் பற்றி ஜெர்மனி தரப்பிலேயே அதிசயித்துக் கூறப்படும் ஒரு விஷயம், “ஒரு ரஷ்ய வீரனை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டாலும், அருகே சென்று எட்டி உதைத்தால்தான் அவன் கீழே விழுவான். அந்தளவிற்கு அவர்கள் மனோவலிமை உடையவர்களாய் இருந்தார்கள்” என்பதே.

ஆரம்பத்திலிருந்தே, சோவியத் விஷயத்தில் பல வியூக சொதப்பல்களை ஹிட்லர் மேற்கொண்டிருந்தார். தொடக்கத்திலேயே ஹிட்லரின் ‘பன்ஸர்’ ராணுவம், மாஸ்கோவை குறிவைத்து முன்னேறவில்லை. காலம் கடந்தே மாஸ்கோவைக் கைப்பற்றும் முடிவு எடுக்கப்பட்டது. அப்படியிருப்பினும், அவர்கள் மாஸ்கோவை மிகவும் நெருங்கினார்கள். கிரெம்ளின் மாளிகையின் கோபுரங்களை கண்களால் காணும் அளவிற்கு அவர்கள் முன்னேறினார்கள். ஆனால், அப்போதே நாஸி ஜெர்மனியின் பன்ஸர் ராணுவமாகிய தாங்கள் மிகவும் பலவீனப்பட்டு போயிருப்பதையும், மாஸ்கோவை கைப்பற்றும் அளவிற்கு வலுகொண்டவர்களாக அப்போது இருக்கவில்லை என்பதையும் உணர்ந்து விட்டார்கள்.

இறந்துகிடக்கும் ஒரு சோவியத் வீரன்

மாஸ்கோவின் புறநகர் பகுதியிலிருந்து ஜெர்மனி ராணுவம் விரட்டியடிக்கப்பட்ட தருணத்தில்தான், சோவியத்தின் வல்லமையை ஹிட்லர் சீரியஸாக உணரத் தொடங்கியிருந்தார். மாஸ்கோவுக்கு முதுகைக் காட்டி, பன்ஸர் ராணுவம் நகரத் தொடங்கியிருந்த நேரத்தில், அமெரிக்க அதிபர் ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட், சோவியத்தைப் புகழ்ந்து தள்ளிய வார்த்தைகளும் வெளியாகின.

மாஸ்கோ திட்டம் தோல்வியடைந்த விரக்தியுடன், கடும் கோபமும் ஹிட்லருக்கு சேர்ந்துகொள்ள, அன்றைய சோவியத் யூனியனின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகவும், பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும், அப்போதைய சோவியத் அதிபரின் பெயரைத் தாங்கிய ஒன்றாகவும் இருந்த ஸ்டாலின்கிராட் நகரை நோக்கித் திரும்பியது. எப்பாடுபட்டாவது, அந்நகரை தனது ராணுவம் கைப்பற்றியே ஆகவேண்டுமென விரும்பிய ஹிட்லர், தன் ராணுவத்தின் திறமையான தளபதிகளையும், படைப்பிரிவுகளையும் அனுப்பினார்.

ஆனால், அங்குதான் இரண்டாம் உலகப் போரின் போக்கே மாறியது. அந்த இடத்தில் பன்ஸர் ராணுவத்திற்கு கிடைத்த தோல்வியானது, உலக நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகளையே மாற்றிவிட்டது. இப்போரில் திறமையாக சமாளித்தாலும், சோவியத் எப்படியும் தோற்றுவிடும் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களின் கணிப்புகள் பொய்யாகின. அதுவரையான போர் நடவடிக்கைகளில், நாஸி ராணுவம் முதன்முதலாக ஒரு தீர்க்கமான தோல்வியைச் சந்தித்தது. திறமையான தளபதிகளும், 2.5 லட்சத்திற்கும் மேலான படைவீரர்களும் சோவியத்திடம் சிக்கிக் கொண்டது ஸ்டாலின் கிராட் போர்க்களத்தில்தான்.

ஸ்டாலின்கிராடில் கொத்தாக மாட்டிய பன்ஸர் ராணுவம்

இந்த வெற்றியை அடுத்தே, அதுவரை தற்காப்பு யுத்தம் மேற்கொண்டிருந்த சோவியத் யூனியன், அதன்பிறகு தாக்குதல் யுத்தத்தில் இறங்கியது. சோவியத் மண்ணிலிருந்து நாஸி ராணுவத்தை முற்றிலும் விரட்டியடித்து, அவர்களின் கைவசமிருந்த நாடுகளை ஒவ்வொன்றாக விடுவித்துக்கொண்டு சென்ற செஞ்சேனை, இறுதியாக, ஜெர்மனியின் எல்லையில் போய் நின்றது!

ஸ்டாலின்கிராட் யுத்தத்திற்குப் பிறகான அடுத்தடுத்த போர் நடவடிக்கைகளில், ஹிட்லரின் படையினர் கொத்துகொத்தாக, சோவியத்திடம் சிக்குவது வாடிக்கையானது. இதனால், ஹிட்லர், மேற்கு ஐரோப்பாவில் நிறுத்தப்பட்டிருந்த தனது படைகளின் பெரும்பகுதியை கிழக்குப் பக்கம் நகர்த்த வேண்டியிருந்தது!

இந்த ஸ்டாலின் கிராட் வெற்றிக்குப் பிறகுதான், ஈரான் தலைநகர் டெஹ்ரானில், சோவியத் அதிபர் ஸ்டாலின், அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் மற்றும் பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கலந்துகொண்ட சந்திப்பும் நடைபெற்றது. அவர்களுக்கிடையிலான ஏரியா பிரிப்பு அரசியல் பேரங்கள் அப்போதிருந்துதான் தொடங்கின.

டெஹ்ரான் சந்திப்பு காட்சி

ஐரோப்பாவின் கிழக்குப் போர்முனையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றங்களால், அமெரிக்க – பிரிட்டன் கூட்டணி, 1944ம் ஆண்டு தங்களின் ஆதிக்கத்தை உறுதிபடுத்திக்கொள்ள, பிரான்ஸ் நாட்டின் நார்மண்டியில் தங்கள் சார்பான போர் நடவடிக்கையைத் துவங்கின. ஆனால், முன்பே சொன்னதுபோல், ஹிட்லரின் ஏராளமான படைகள் கிழக்குப் பக்கம் அனுப்பப்பட்டு விட்டதால், அமெரிக்க – பிரிட்டன் கூட்டணிக்கான வேலை பெரிதாக இருந்திருக்காது என்பது எளிதாக புரிதலுக்கு உட்படக்கூடியதே! ஆனால், இந்த சிறிய வேலைதான், பெரிய வேலையாக பலதரப்பிலும் ஊதிக் காட்டப்பட்டு வருகிறது. இந்த நாடுகள் இரண்டாம் உலகப்போரில் சந்தித்த இழப்புகள் மற்றும் செய்த தியாகங்கள், அன்றைய சோவியத்துடன் ஒப்பிடுகையில் சொற்பமே!

இரண்டாம் உலகப்போர் என்பது, முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணி எதுவோ (காலனி ஏகாதிபத்திய பேராசை), அதே காரணியால்தான் உருவானது. ஆனால், அந்தப் போர், அமெரிக்கா, ஜப்பானில் வீசிய அணுகுண்டுகளால் இறுதியாக முடிவுக்கு வந்தது என்பது பொதுவான வரலாறு என்றாலும், போரின் மைய சக்தியாக இயங்கிய ஜெர்மனியின் கூட்டுப் படைகளை வென்று சரணடையச் செய்வதில்தான் போரின் உண்மையான முடிவு அடங்கியிருந்தது.

நார்மண்டி படை நடவடிக்கை

அந்தப் பிரதான செயலை, ஏராளமான இழப்புகளைச் சந்தித்து, வெற்றிகரமாக செய்து முடித்தது சோவியத் யூனியன். நாஸி ஜெர்மனியின் எல்லையில் காலடி எடுத்துவைத்த முதல் எதிரி நாடு சோவியத் யூனியன்தான்!

ஒருவேளை, போரில் சோவியத் யூனியனை ஜெர்மனி வீழ்த்தியிருந்தால், உலகின் வரலாறு இன்று வேறாகத்தான் இருந்திருக்கும். ஏனெனில், அதன்பிறகு, ஹிட்லரை எந்தக் கூட்டணியாலும் வென்றிருக்க முடியாமல் போயிருக்கும். ஏனெனில், சோவியத்தை வீழ்த்தியதன் மூலம், ஹிட்லருக்கு கிடைத்திருக்கக்கூடிய வளங்கள் அப்படியானவை!

ஸ்டாலினுக்குப் பிந்தைய சோவியத் யூனியன், பொதுவுடைமைப் பாதையிலிருந்து மாறி, சமூக ஏகாதிபத்தியமாக மாறி, இன்று ஒரு முதலாளித்துவ நாடாக இருக்கிறது. ஆனாலும், பனிப்போர் காலத்திய அடையாளப் பகை இன்றும் தொடரத்தான் செய்கிறது!

இரண்டாம் உலகப்போர் முடிவின் 75வது ஆண்டுவிழாவை ரஷ்யா, எந்தளவு சிறப்பாக கொண்டாட திட்டமிட்டிருக்கும் என்பதையும், அதன் நியாயத்தையும் இப்போது நம்மால் புரிந்துகொள்ள முடியும்தான்!

கொரோனா பரவலால் அந்தப் பெருமிதக் கொண்டாட்டம் ரத்துசெய்யப்பட்டதால், அந்நாட்டினருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஏமாற்றமும் பெரிதாகத்தான் இருந்திருக்கும்..!

 

– மதுரை மாயாண்டி