எம்.பி., எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை சசிகலா கூட்டியது ஏன்?

சென்னை,

திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டத்தை சசிகலா கூட்டியது ஏன் என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

நேற்று மாலை  அதிமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் நடந்தது. திடீரென இந்த கூட்டம் நடத்தப்பட்டதால், எதற்காக இந்த கூட்டம் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து ஆட்சியை அவர் கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொதுமக்களிடையேயும் கட்சியின் அடிமட்ட தொண்டர்களிடையேயும் அவருக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை.

தமிழக முதல்வராக இருக்கும் ஓ.பி.எஸ் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். இதன் காரணமாக, ஆட்சியும், கட்சியும்  தனது கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பதை வெளி உலகிற்கும் தெரிவிக்கும் வகையிலேயே இந்த கூட்டம் கூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டத்திற்கு வந்த சசிகலாவை வரவேற்ற அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர்,, சின்னம்மாவே வருக, முதலமைச்சர் பதவியை பெருக என  கோஷமிட்டனர். இது தற்போதைய முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை எரிச்சலடைய செய்தது.

ஓபிஎஸ்சின் தற்போதைய செயல்பாடும், மீடியாக்களில் வரும் செய்திகளையும் உற்று கவனித்துவரும் அதிமுக தலைமை, அவரை கண்காணித்தே வருகிறது. மேலும் அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வகையிலும் இந்த நேரடி சந்திப்பு மேற்கொள்ளப்பட்ட தாக கூறப்படுகிறது.

கட்சி தலைமைக்கும், எம்எல்ஏ, எம்பிக்களுக்கு இடையே, இடைவெளி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்த கூட்டம் நடைபெற்றதாம்.

இந்த கூட்டத்தில் சசிகலா மட்டுமே பேசினாராம். சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் எம்எல்ஏக்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும். அதாவது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை எவை, எவை என்பதை சசிகலா உத்தரவாக பிறப்பித்தாராம்.

மற்றபடி பெரிய அளவிலான முக்கியமான கருத்துகள் எதுவும் வெளியிடவில்லையாம்

இறுதியாக பெண் எம்எல்ஏக்களுடன் தனியாகவும், அனைத்து எம்எல்ஏக்களுடன் ஒரு குழுவாகவும், புகைப்படம் எடுத்து கொண்டனர்.

ஒரு புகைப்படத்தில் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, செந்தில்பாலாஜி, சி.வி.சண்முகம், சரோஜா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மிஸ்ஸிங்காம்..