“உடன் பிறவா சகோதரி” என்ற வார்த்தை பிரயோகத்துக்கே காரணமாக இருந்தவர் சசிகலா. இப்போது தன் உடன் பிறந்த சகோதரர் திவாகரன், தன்னை “சகோதரி” என்று அழைக்கக் கூடாது என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

இதனால் ஆதங்கமடைந்த திவாகரன், “இனி சசிகலாவை சகோதரி என்று அழைக்கமாட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், “என்னுடைய முன்னாள் சகோதரி. சசிகலா நோட்டீஸ் அளித்ததால், எனது அரசியல் பயணம் நின்றுவிடாது. தினகரனின் மிரட்டல் அரசியலின் உச்சம். ஓ.பன்னீர் செல்வம் , சசிகலா விரோதத்துக்குத் தினகரன்தான் காரணம்” என்றும் காரசாரமாகப் பேசியிருக்கிறார்.

இந்த அளவுக்கு திவாகரன் மீது சசிகலாவுக்கு என்ன கோபம்?

இது குறித்து விசயமறிந்தவர்கள் தெரிவிப்பதாவது:

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவை அவ்வப்போது சந்தித்து வருகிறார் அல்லவா தினகரன். அப்போது சசிகலாவைப் பற்றி குடும்பத்தினர் பேசும் விஷயங்களை எல்லாம் எடுத்துக்கூறுவார்.

தவிர சிறு பத்திரிகை செய்தியாக இருந்தாலும் யூ ட்யூப் வீடியோவாக இருந்தாலும் அதையெல்லாம் ஓர் ஆதாரமாக வைத்துக் கொண்டுதான் தினகரன் பேசுவார். வெறுமனே குற்றச்சாட்டுகளைக் கூறாமல் ஆதாரத்தோடு பேசுவதால், அவர் சொல்வதை சசிகலாவும் கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் தினகரனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் கொதிப்பில் இருந்த திவாகரன், சசிகலாவை தாறுமாறாகப் பேசி வந்தார். அதுபோல முக்கிய நிர்வாகிகளுடனான சந்திப்பில் சசிகலாவைப் பற்றி சில வார்த்தைகளைப் பேசியிருக்கிறார் திவாகரன். இதைப் படம் பிடித்த நபர், டி.டி.வியிடம் அளித்துவிட்டார்.

இதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் தினகரன்.

திவாகரனுக்கு எதிராக வெற்றிவேல் வெளியிட்ட அறிக்கையில், ‘ தரக்குறைவான வார்த்தைகளில் சசிகலாவை விமர்ச்சிக்கிறார்’ எனக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு முன்னதாகவே, திவாகரன் பேச்சுக்களைத் தொகுக்கும் வேலைகள் ஆரம்பித்துவிட்டன.

இந்தப் பேச்சுக்களை எல்லாம் வீடியோ, ஆடியோவாக தொகுத்து சசிகலாவிடம் காண்பித்திருக்கிறார் தினகரன்.

இதனால்தான் திவாகரன் மீது சசிகலாவுக்கு கடும் ஆத்திரம் வந்திருக்கிறது. தனது பெயரையே பயன்படுத்தக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பிவிட்டார்”என்கிறார்கள்.