கான்பெர்ரோ

ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே இந்திய கேப்டன் கோலியை வம்பிழுப்பதில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட்  அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பலரும் முந்நாளில் கோலியை வம்பிழுப்பார்கள். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. இது குறித்தும் ஆஸ்திரேலிய அணி வீரர்களின் தற்போதைய சூழல் குறித்தும் கிளார்க் மனந்திறந்து பேசியுள்ளார்.

“உலகளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு அமைப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளது. ஐபிஎல் போட்டிகளே அதற்கு மிகச் சிறந்த சான்றாகும். ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த வீரர்கள் பலரும் ஐபிஎல் ற்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோலியை வம்பிழுத்தால் தங்களுக்கு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்காது என்பதற்காகவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பலரும் அமைதியாக உள்ளனர்” என்றார்.

மேலும் “ஆறு வாரத்திற்கு 1 மில்லியன் டாலர் அளிக்கும் ஐபிஎல் விளையாட்டில் இடம்பெறும் வாய்ப்பினை மிகவும் பெரிதாக வீரர்கள் கருதுவது தவறு” எனவும் அவர் சாடினார்.

கொரோனாத் தொற்று காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் 20/20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி அக்டோபர் மாதம் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது…