ஏ. கொ. இ.: 4:  “ஹே….ஓ….ம்….லல்லல்லா….” – நியோகி

ஏன் கொண்டாட வேண்டும் இளையராஜாவை – தொடர் – அத்தியாயம்-4-  நியோகி

1980 களில் வெளி வந்தது நிழல்கள் !

அந்த படத்தின் கதை என்ன என்று கேளுங்கள், யாருக்கும் நினைவிருக்காது ! ஆனால், “இது ஒரு பொன் மாலைப் பொழுது…” என்னும் பாடலைக் கேட்க ஆரம்பித்தவுடன், அதன் பாடலாசிரியர் – படம் – இயக்குனர் என ஒவ்வொருவராக நம் நினைவுக்கு வந்து, வந்து அங்கே ஒரு ரகசிய விமோசனம் வாய்த்து விடுகிறது !

பதின் பருவத்தைக் கடந்து உலகை தரிசிக்கும் ஒரு இளைஞனின் மனநிலைக்கான பாடல் அது ! அந்தப் பாடலைக் கொடுக்கும் போது இளையராஜாவுக்கு வயது 37 !

மஞ்சள் வெயில் கசிந்து வழியும் ஒரு மாலைப் பொழுதின் துவக்கத்தை நம் காதுகளுக்கு தர விரும்பிய இளையராஜா, கூடடையப் போகும் பறவைகளின் குரல்களோடு அந்தப் பாடலைத் துவங்குவார்… அதைத் தொடர்ந்து கிடார் நோட்ஸ்களும், வயலின் ஸ்ட்ரோக்குகளும் வழி மொழிய, ஆர்மோனியமும், ஸந்த்தூரும், ஃப்ளூட்டும் பல்லவியை நோக்கி நம்மை மெல்ல மெல்ல இட்டு செல்ல…காலத்தை வெல்லப் போகும் தன் பாடலை இப்படித் துவங்கினார் !

“ஹே….ஓ….ம்….லல்லல்லா….”

அடடா… அதன் பின் வரும் வரப் போகும் பாடலின் ஒட்டு மொத்த வரிகளும் தரக் கூடியதோர் உணர்வெழுச்சியை… அந்த ஒற்றை “ஹம்மிங்கில்” வைத்துப் போனார் ! அந்த மேஜிக்தான் இளையராஜா !!

எப்போது கேட்டாலும் மனதை சுண்டி இழுக்கும் இந்த ஹம்மிங்கில் “ஓம்” என்னும் ப்ரணவமும் அடங்கியிருப்பதைக் கவனித்தீர்களா..? இதை தெரிந்து வைத்தாரா… அல்லது, அது இயல்பாகவே அமைந்ததா என்பது அந்த இளையராஜாவுக்கே வெளிச்சம் !

இளையராஜாவின் ஹார்மோனியத்தில், கறுப்பு வெள்ளைக் கட்டைகளைக் கடந்து பல மாயக் கட்டைகளும் இருந்திருக்க வேண்டும் ! அவைகள் இளையராஜாவைப் பார்த்து மட்டுமே கண்சிமிட்டிக் கொண்டிருந்திருக வேண்டும் !

கிடார் என்னும் வெஸ்டர்ன் வாத்தியத்தை, படுக்க வைக்கப்பட்ட நிலையில் இருக்கும் பியானோ என்று சொல்வார்கள். அந்த கிடாரிலும் அவர் வல்லவராக இருந்தார் ! அவரால், ரசிகர்களின் பல்ஸை தன் விரல் நுனிகளில் வைத்திருக்க முடிந்தது ! அதற்குக் காரணம், ரசிகர்களை அவர் மனதார நேசித்தார் , மதித்தார் !

“பொன் மாலைப் பொழுது…” பாடலை, “கேதாரம்” என்னும் ராகத்தில் அமைத்திருந்தார் இளையராஜா ! ஏறத்தாழ 10 வருடம் கழித்து வந்த, உலக நாயகன் கமல்ஹாசனும் – எஸ். ஜானகி அம்மாவும் இணைந்து பாடிய கனவுலகப் பாடலான, “சுந்தரி நீயும்…சுந்தரன் ஞானும்…” என்னும் அந்தப் பாடலும் “கேதார” ராகம் தான் ! ஆனால், முற்றிலும் புதிய அப்ரோச் !

சொல்லுங்கள், இரண்டு பாடல்களும்  ஒரே ராகம்தான் என்றால் நம்ப முடிகிறதா..? அதுதான் இளையராஜா !

அதே போல, “தென்றலே என்னைத் தொடு” என்னும் பக்கா சிட்டி பேஸ்டு யூத் படத்தில் அமைந்த “தென்றல் வந்து என்னைத் தொடும்….” என்னும் பாடலும், ராம ராஜன் நடித்த பக்கா கிராமியப் படமான  “ஊரு விட்டு ஊரு வந்து…” படத்தில் அமைந்த “சொர்க்கமே என்றாலும்….” என்னும் பாடலும் ஒரே ராகம்தான் என்றால் நம்பத்தான் முடிகிறதா..?

ஆம், இரண்டும்…”ஹம்ச நாதம்” என்னும் ஒரே ராகத்தில் அமைந்த பாடல்கள் ! ஒரே ராகத்தில் சிட்டியையும் காட்டுவார், கிராமத்தையும் காட்டுவார் ! அந்த ரஸவித்தையின் ஃபார்முலா அவருக்கே உரியது !

வாசகர்களுக்கு முதலில் ஒன்றை சொல்லி விடுகிறேன்.

சினிமாப் பாடல்களை முழுக்க முழுக்க ஒரே ராகம் பேஸ்டாக அமைப்பது என்பது கடினம். கொஞ்சம் அப்படி இப்படி வெளியே போகத்தான் செய்யும். அது சுவை கருதி செய்யப்படும் ஜாலம் !

சினிமா இசையில் அது குற்றமில்லை. ஆகவே, குறிப்பிட்ட பாடலில் எந்த ராகம் அதிகம் பேசுகிறதோ அதையே அந்த பாடலின் ராகமாகக் கொண்டே குறிப்பிடுகிறேன். மீறாமல், ஒரே ராகத்தில் அமைக்கப்பட்ட பாடல்களும் நிறையவே உண்டு !

இளையராஜா இன்னொரு சாகஸமும் செய்திருக்கிறார் !

ஒரே படத்தில், ஒரே ராகத்தில், இரண்டு பாடல்களைப் போட்டிருக்கிறார் ! ஆனால், நம்மால் கண்டே பிடிக்க முடியாது !

எஜமான் படத்தில்… “நிலவே முகம் காட்டு…”  என்ற பாடலும், அதே படத்தில் வரும்   “ஒரு நாளும் உனை மறவாத…” என்ற பாடலும் ஒரே ராகம்தான்…! இரண்டுமே “சிந்து பைரவி” ராகம் என்று சொன்னால் தான் தெரியும் !

அப்படி ஒரு காண்ட்ராஸ்ட் டைமண்ஷனைக் கொடுக்க வல்லவர் இளையராஜா ! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் !

இன்னும் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும் !

ஒரு சினிமா பாட்டு என்பது சராசரியாக 5 நிமிடங்கள் ஓடக் கூடியது. ஆக, ஒரு ராகத்தை எடுத்துக் கொண்டு…அதில், பல்லவி – சரணங்களை இட்டு, அதே ராகத்தில் மூன்று பி ஜி எம் களையும் இட்டு, எங்குமே கொஞ்சம் கூட போரடிக்காமல் அந்த 5 நிமிடங்களையும் விறுவிறுப்பாக கொண்டு சென்று முடிக்கிறார் இளையராஜா !

ஒரு கர்நாடகக் கச்சேரியில் ஒரு ராகத்தை எடுத்துக் கொண்டு, சுமார் அரை மணி நேரம் கூடப் பாடுவார்கள் தான். அதுவும் பெரிய விஷயம்தான் !

ஆனால், அவர்கள் பாடுவது அந்த சபா ரசிகர்களுக்கு ! இசையை நன்கு அறிந்த, அதன் நுணுக்கங்களைப் நன்கு புரிந்த, தேர்ந்த ரசிகர்களுக்கு மட்டும்.

இளையராஜா இசைப்பது சபாக்களுக்கல்ல ! ஒட்டு மொத்த தன் ரசிகர்களுக்காக…!

விவரம் தெரிந்த காதுகள் – பாமரக் காதுகள் என்ற பேதமெல்லாம் அவருக்கு இல்லை ! 8  கோடி தமிழர்களையும் த்ருப்தி செய்தாக வேண்டும் என்பதே அவரது ஒரே நோக்கம் ! தவம் ! அதனால்தான் அவரை நாம், “மகாஞானி” இளையராஜா என்று ஆரத் தழுவிக் கொண்டாடுகிறோம் !

ஒரு ஆலயத்திலிருந்து புறப்பட்டு வரும் துளசி வாசம் சாதி மத வர்க்க பேதம் பார்த்துக் கொண்டா நாசி புகும் !?

அப்படிப் பேதம் பார்க்கும் என்றால் அதற்கு அந்த புனித மணத்தைக் – குணத்தை இறைவன் அருளியிருப்பானா…?

துளசியின் மணம் எப்படி ஒரு சூஃபியின் ப்ரார்த்தனைப் போல காற்றில் தவழ்கிறதோ… அப்படித்தான் இளைய ராஜாவின் இசையும் !

இளையராஜாவின் கண்களைப் உற்று நோக்கிப் பாருங்கள், அவர் எந்த நேரமும் படைப்பு சிந்தனையிலேயே இருப்பதை நம்மால் கண்டு கொள்ள முடியும் !

இசையைத் தவிர வேறு எதைப்பற்றிக் கேட்டாலும் அவர் டிஸ்டர்ப் ஆகிவிடுவதாகவே தோன்றுகிறது.

நீரிலிருந்து பிரிக்கப்பட்ட மீனைப் போல, அவரது உலகத்திலிருந்து அவரை வெளியே இழுத்து சம்பந்தமில்லாத கேள்வியைக் கேட்கும் போது அவர் அந்த மீனைப் போலவே பதட்டமாகிறாரோ என்று தோன்றுகிறது.

எல்லோரிடமும் கேட்பதைப் போன்ற சாதாரணமான கேள்விகளோடு மீடியாக்கள் அவரை அணுகும்போது இப்படித்தான் நடந்து விடுகிறது !

இளையராஜா மீது  தவறு சொல்பவர்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் !

நாம் ஒரு உலகத்தில் இருக்கிறோம், அவர் வேறு ஒரு உலகத்தில் இருக்கிறார் ! ஈகோ இல்லாமல் இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் ! நமக்காக ஓயாமல் இசைக்கும் அந்த “மகாஞானிக்கு” இந்த சலுகையை நாம் வழங்கியாக வேண்டும் !

“ரசிகர்களே…உங்கள் காசில்தான் நான் வாழ்கிறேன்…” என்று அவர் வேண்டுமானாலும் சொல்லலாம் ! ஆனால், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்… பிடிக்காத ஒன்றையா நாம் காசு கொடுத்துக் கேட்போம்..?

பிடித்ததினால் தானே கேஸட்டுகளும் சிடிக்களுமாக தேடித் தேடி வாங்கி அனுபவித்தோம் ! அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் !?

இளையராஜாவை என்னும் “மகாஞானியை” ஆற அமர புரிந்து கொண்டு அணுகினால் அவரது மொழியை நாம் அணு அணுவாக ரசிக்கலாம். இல்லையென்றால் நட்டம் அவருக்கில்லை ! நமக்குத்தான் !

1992 ல் ஒரு பேட்டியில், சினிமா நிருபர் ஒருவர் வழக்கமாக கேட்டதொரு கேள்விக்கு இப்படி  பதில் சொல்லியிருந்தார் !

கேள்வி : நீங்கள் இசையமைப்பாளராக முடியாமல் போயிருந்தால் என்னவாகியிருப்பீர்கள்…?

இளையராஜா : இறைவனாயிருப்பேன் !

சட்டென இளையராஜா இப்படி சொல்லிவிட்டாலும்…

இது, சாதாரணமான பதிலில்லை…மாக்ஸ் ப்ளாங்க்,  ஆர்பர்ட் ஐன்ஸ்டீன் போன்றோர் கண்டு சொன்ன க்வாண்டம் தியரி ! ஈசா வாஸ்ய உபநிடத்தின் சாரம் !

புரியவில்லையா..? கவலை வேண்டாம் !

ஒருவேளை புரிந்து விட்டால், நாமும் இளைய ராஜாவாகி விடலாம் !

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published.