‘நீரில்லா நெற்றி பாழ்’ என்று ஆன்றோர்கள் சொல்வதுண்டு. ஒவ்வொருவரும், தங்களது நெற்றி யில், விபூதியோ திருமண்ணோ இட்டுக்கொள்வது, இந்துக்களின் பாரம்பரியம். புராணங்களில் விபூதியின் மகிமையும், அதனால் கிடைக்கும் பலன்களும்  எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. உடலானது அத்தகைய அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உடம்பினுள் வாங்கும் திறன் கொண்டது. அதனால்தான் சித்தர்கள், திருநீறு அணிந்துகொள்ளும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். அந்த பழக்கம் தொன்றுதொட்டு இவ்வுலகம் உள்ளளவும் தொடரும் என்பதில் ஐயமில்லை.

 விபூதி இட்டுக்கொள்ளும் இடங்களும் அதன் பலன்களும் ….

மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது; நெற்றியில் வெப்பம் அதிகமாக உள் வாங்கப்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான வேலையை திருநீறு செய்கிறது, ஆகையால், திருநீறை முதலில் நெற்றியில் அணிகின்றனர்.

நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. அனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான்.

புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம். அதனால்தான் முதலில் நெற்றியில் திருநீறு பூசப்படுகிறது.

இரண்டாவதாக திருநீறை தொண்டைக்குழி (விசுத்தி சக்கரம்) பகுதியில் பூசலாம். இது  நமது சக்தியை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

3வதாக, நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதியிலும் திருநீறு பூசலாம். இதனால்,  தெய்வீக அன்பைப் பெறலாம்.

இதுமட்டுமின்றி, உடலில்  பதினெட்டு இடங் களில் திருநீறு பூசலாம் என ஆன்மிக நூல்கள் குறிப்பிடுகின்றன.  அவை, உச்சந்தலை; நெற்றி; மார்புப் பகுதி; தொப்புளுக்கு சற்று மேல்; இடது தோள்பட்டையில்; வலது தோள்பட்டையில்; இடது கை மற்றும் வலது கையின் நடுவில்; இடது மற்றும் வலது மணிக்கட்டில்; இடது மற்றும் வலது இடுப்புப் பகுதியில்; இடது மற்றும் வலது கால் நடுவில்; முதுகுக்குக் கீழ் பகுதி; கழுத்து முழுவதும்; இரண்டு காதுகளின் பின்புறம் உள்ள குழி ஆகிய பகுதிகளிலும் திருநீறு பூசலாம்.

ஒருவர் விதியை எடுக்கும்போது, மோதிர விரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

பொதுவாக ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டால், அவரது உடல் சூடு குறித்து,  நெற்றியில் கைவைத்து பார்ப்பது வழக்கம். நெற்றியின்  உஷ்ணத்தின் தன்மையை பொறுத்து அவர்கள் காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

நெற்றியில்தான், மூளையை  இணைக்கும் நரம்பு செல்வதால், உடல்நலப் பாதிப்பு அதன்மூலம் வெளியே தெரிய வருகிறது. மேலும, நெற்றிப்பகுதி அதிக சூடாவதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த நேரத்தில் நரம்பின் சூட்டை குளிரச் செய்து, நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாப்பது, நாம் நெற்றியில் பூசும் விபூசி மற்றும்  சந்தனத்தின் தன்மை.

தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி தரிப்பதன் நோக்கம்.

அதன் காரணமாகவே ஆன்மிக வாதிகளும், சித்தர் களும்  விபூதியை உடல்முழுவதும் பூசிக் கொள்கிறார்கள்.

விபூதி திருநீறு என்றும் அழைக்கப்படும். சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் நெற்றியில் தரித்துக்கொள்வது திருநீறு. விபூதி தரித்துக் கொள்வதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன.

காலையிலும் மாலையிலும், கோயிலுக்குச் செல்லும்போதும், இரவு படுக்கப்போகும் முன்பும் விபூதி தரித்துக்கொள்ளலாம்.

ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், முடிவில் பிடி சாம்பல்தான் என்ற தத்துவத்தையும் நமக்கு திருநீறு உணர்த்துகிறது.