சென்னை,

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக, தற்போது சசிகலா ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றுள்ளார். நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட இருக்கிறது.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு,  தமிழ்நாட்டில் நடக்கும் சில அரசியல் சூழ்நிலைகளால் மனம் வருந்தி தனது முகநூல் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அதில், முதன்முறையாக … மறைந்த முதல்வர் சமாதிக்கு சென்றேன். தியானிக்க அல்ல… ஜீரணிக்க என்று  குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் எழுந்துள்ள சூழல் குறித்து நடிகர் பார்த்திபன் கூறியிருப்பதாவது,

104 சாட்லைட்களை  உள்ளடக்கிய ஏவுகனை விண்ணில் ஏவிய சாதனையை மறைக்கும் விதத்தில் இன்று தமிழ்நாட்டின்  அரசியல் சூழல் இருக்கிறது.

நான் கட்சி சார்பில் எப்போதும் பேசுவதில்லை. பொதுமக்களின் மனநிலையில் இருந்து மட்டுமே பேசுகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும்,  ஒரு கோட்டை சின்னதாக்க வேண்டும் என்றால் பக்கத்தில் பெரிய கோடு போட வேண்டும். அதுபோலத்தான், சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதி மன்றத்தில் தீர்ப்பு உள்ளது. மறைந்த ஜெயலலிதாவும் ஒரு குற்றவாளிதான் என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறது.

அப்படி என்றால் ஒரு குற்றவாளி கை காட்டியவர் எப்படி முதல்வராக முடியும். அல்லது சமீபத்தில் குற்றவாளி யான ஒருவர் கை காட்டுபவர்தான் நமக்கு முதல்வரா? இந்தக் குழப்பம் மக்களிடம் அதிமாகி இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும், நான் கூவத்தூர் பக்கம் போனேன். அந்தப் பக்கம் இருந்த மக்கள் எம்எல்ஏக்களை கெட்ட கெட்ட வார்த்தை கள் சொல்லி திட்டினார்கள். இந்த பொதுமக்களின் எதிர்ப்புக்கும் அவலநிலைக்கும் பின்னாடி ஒரு அரசாங்கம் அமைப்பது சரியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்,  கூவத்தூரில் இருக்கும் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக இருப்பதாக திரும்ப திரும்ப சொல்கிறார்கள். அப்படியென்றால் அவர்கள்  சொல்லிக் கொடுத்ததை சரியாக சொல்கிறார்கள் என்று அர்த்தம்.

ஒரு முறை சொன்னால் பரவாயில்லை. திரும்ப திரும்ப சொன்னால் கிளிப் பிள்ளை என்றுதானே அர்த்தம் என்று கூறி உள்ளார்.

மேலும், மறுதேர்தல் நடைபெற்றதால், அது திமுகவிற்கு சாதகமாக இருக்குமா அல்லது அதிமுகவிற்கு சாதகமாக இருக்குமா என்று நான் பேசவில்லை.

ஜல்லிக்கட்டு நேரத்தில் மாணவர்களிடையே எழுந்த ஒரு புரட்சி போல் இன்னொரு புரட்சி வந்தே தீர வேண்டும். மறுபடியும் இங்கு ஒரு மாற்றம் வர வேண்டும். மறு தேர்தல் வர வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

மறுதேர்தல் வைத்தால் மக்களின் பணம் வீணாகப் போகும்தான். ஆனால், கூவத்தூர் பக்கமாக வந்தால் 1000 போலீசார் அந்தப் பக்கம் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு யார் சம்பளம் வழங்குவது? அது மக்களுடைய பணம் தானே? எம்எல்ஏக்கள் அங்கு தங்குவது அவர்களுடைய விஷயமாக இருக்கலாம். அவர்களுக்கு ஏன் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்?

மெஜாரிட்டி நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர். ஆனால் அந்த அரசாங்கத்தின் மீது மக்களுக்கு எவ்வளவு அதிருப்தி இருக்கிறது என்பதுதான் முக்கியம். யாருடைய மெஜாரிட்டி நிரூபிப்பதற்கு பதிலாக மறுதேர்தலை ஏன் நடத்தக் கூடாது?

ஒட்டுமொத்தமாக இருவருக்குமே மக்களிடம் முழுமையான ஆதரவு இல்லை. இன்னும் 4 ஆண்டுகள் நமக்கு இருக்கு. அதுவரைக்கும் நாம் ஏன் பல்லைக் கடித்துக் கொண்டு சகித்துக் கொள்ள வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவர் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் போராட்டம் நடத்தியபோது,  மக்கள் மன்றத்தின் சக்தி என்பது நீதிமன்ற தீர்ப்பை விட வலிமையானது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.