பிரிஸ்பேன்: இந்திய அணியில் காயத்தால் ஏற்கனவே பல வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரிஸ்பேன் டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்தில், இந்தியப் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனியும் இடுப்பு பகுதியில் காயமடைந்த நிகழ்வானது, இந்திய பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்டுகளின் செயல்திறன் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடியும் தருவாயில் இருந்தாலும், இந்திய பவுலர்கள் இப்படி தொடர்ச்சியாக காயமடைவதானது, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய பவுலர்களை தேர்வுசெய்வதில், தேசிய அணி நிர்வாகத்திற்கு பெரிய சிக்கலை ஏற்படுத்துவதாய் மாறியுள்ளது.

பொதுவாக, ஒரு விளையாட்டு வீரர் காயமடைவதற்கு 2 காரணங்கள் உண்டு. ஒன்று அதிர்ச்சி, மற்றொன்று உடற்பயிற்சி. இதில், காயமடைவதற்கான பிரதான காரணம் உடற்பயிற்சி என்றால், பிசியோதெரபிஸ்டுகளின் செயல்பாடு குறித்த சந்தேகம் எழுகிறது.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை, மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட் மற்றும் நாதன் லயன் போன்றவர்கள் தொடர்ச்சியாக அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் ஆடி வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படுவதில்லை. ஆனால், இந்திய அணிக்கு மட்டும் எதற்காக இந்த சிக்கல் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விகள், பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய்ஷா ஆகியோரை நோக்கி எழுந்துள்ளது.