ஈழப்பகுதி என அழைக்கப்படும் இலங்கையி்ன் வடக்கு கிழக்கு பகுதகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழந்து வருகிறார்கள். இப்பகுதியில் தமிழர் – இஸ்லாமியர் இடையே வெறுப்புணர்வு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இஸ்லாமிய நண்பர்கள் கடைகளில் பொருட்கள் வாங்குவதை நிறுத்திவிட்டதாக, தமிழர்கள் சிலர் முகநூல் பதிவிடுவதைக் காண முடிகிறது. இது போன்ற பதிவுகள் “சேவ் முல்லைத்தீவு” என்ற வார்த்தை பதியப்படுகின்றன. இதுபோன்ற பிரிவினை ஏற்பட்டது ஏன்?

இலங்கையில் ஊடகத்துறையில் செயல்பட்டு வந்து தற்போது சுவிஸ் நாட்டில் வாழும் ஜீவேந்திரன் நடராஜன் அவர்களின் எதார்த்தத்தை வெளிப்படுத்தும் முகநூல் பதிவு: “மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்துவது உயிர்களுக்கேயான பொது இயல்பு.

இந்த ஆதிக்கம் நிலம், அரசியல், கலாசாரம், வாய்ப்புகள் என பல நூறாய் விரியும். சிங்களவர்கள் தமிழர் முஸ்லிம்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். தமிழர்களும் முஸ்லிம்களும் தாங்கள் பெரும்பான்மையாகவுள்ள பகுதிகளில் ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

போர் காரணமாக தமிழர்கள் அதிகாரம் இல்லாமலும் வாய்ப்புகள் இல்லாமலும் அடைக்கப்பட்டார்கள். தமிழர்களின் வளர்ச்சி தடைப்பட்டது. ஒரு புறம் சிங்களவர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டார்கள்.

மறுபுறம் முஸ்லிம்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழர்கள் மீது தமது ஆதிக்கத்தை விரிவுபடுத்தினார்கள். தமிழ் கிராமங்கள், நிலங்கள் அடாவடியாகவும், பணத்தை கொண்டும் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்டது.

இந்த இடத்தில் தமிழர்களோ சிங்களவர்களோ யாராக இருந்தாலும் இப்படித்தான் செய்திருப்பார்கள். இதுதான் மனிதனின் ஆதிக்க வேட்கை. எனவே இப்படி முஸ்லிம்களின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் முஸ்லிகள் மீது வெறுப்பு கொண்டிருக்கிறார்கள்.

தமிழர்கள் சிங்களவர்கள் மீது கொண்டுள்ள வெறுப்பை போலவே இது இயல்பானது. யாழ்ப்பாணத்தில் இருந்த முஸ்லிம்களை ஒரே நாளில் புலிகள் வெளியேற்றியது, பள்ளிவாசல் படுகொலைகள் போன்றவற்றால் முஸ்லிம்கள் தமிழர்கள் மீது வெறுப்பு கொண்டிருக்கிறார்கள்.

இந்த வெறுப்பு இயல்பானது நியாயமானது. எனவேதான் பாதிக்கப்பட்ட இனங்களை சேர்ந்தவர்கள் தமது வெறுப்பினை ஆதிக்க இனங்கள் மீது பல வழிகளிலும் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் எல்லாரும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று பொதுப்படையாக சொல்லமுடியாது.

பக்குவப்பட்ட பகுத்தாய்ந்து சிந்திக்க தெரிந்தவர்களும், மற்ற இனத்தவரோடு இந நல்லிணக்கம் பாராட்டுபவர்களும் இருக்கிறார்கள்.

இந்த இன வெறுப்பு நீங்க நீண்ட காலம் செல்லும். ஆட்சியாளர்கள், தூர நோக்கம் கொண்ட ஆக்கபூர்வமான சகல இனத்தவருக்கும் சமமான வாய்ப்புகள் கொண்ட இன நல்லிணக்க செயல்பாட்டு திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவே இந்த இனவெறுப்பை மெதுவாக அகற்ற முடியும்.

அதுவரை அந்தந்த இனங்களை சேர்ந்த அரைகுறைகள் தமது இனவெறுப்பை இப்படி மடத்தனமாக வெளிப்படுத்தவே செய்வார்கள்.”