சென்னை:

பாகிஸ்தான் விடுதலை செய்த இந்திய விமானி அபினந்தனை வரவேற்று ட்விட்டரில் ஹேஸ்டேக் ட்ரெண்டான அன்று கூட, தமிழகத்தில் ‘கோ பேக் மோடி’ ஹேஸ்டேக்கும் இணையாக ட்ரெண்டானது.
மீம் கிரியேட்டர்களும் அன்று இரண்டு பக்கமும் பிஸியாகவே இருந்ததனர்.


‘கோ பேக் மோடி’ ஹேஸ்டேக் முதன்முதலாக கடந்த 2018 ஏப்ரல் 12-ம் தேதி பாதுகாப்புத்துறை கண்காட்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சென்னை வந்தபோது ட்ரெண்டானது.

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்க வலியுறுத்தி ‘கோ பேக் மோடி’ ஹேஸ்டேக் ட்ரெண்டானது. கர்நாடக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக அரசு காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

விமான நிலையத்திலிருந்து கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. ஒருவேளை மோடி ஹெலிகாப்டரில் போகலாம் என்பதால், வானத்தில் கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டன.

ட்விட்டர் பயன்படுத்தும் தமிழர்கள் தொடர்ந்து கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
டெல்லியில் தமிழக விவசாயிகள் 150 நாட்கள் போராடியும் மோடி கண்டு கொள்ளவில்லை என்று கூறி, வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ட்விட்டரில் கோபத்தை வெளிப்படுத்தினர்.

நீட் விவகாரம், ஒக்கி புயலின்போது தமிழத்தை கண்டுகொள்ளாதது ஆகியவை தமிழ் ட்விட்டர்களில் கோபமாக வெளிப்பட்டது.

தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து செயல்படுவதால், மோடி வரும்போதெல்லாம் ‘கோ பேக் மோடி’ என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

‘கோ பேக் மோடி’ ஹேஸ்டேக் மறுபடியும் கடந்த ஜனவரி 27-ம் தேதி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைக்க மோடி வந்தபோது ட்ரெண்டானது.

பிப்ரவரி 10-ம் தேதி திருப்பூருக்கு மோடி வந்தபோதும், ‘கோ பேக் மோடி’ ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது. இதனை முறியடிக்க ‘வெல்கம் மோடி’ என பாஜகவினர் ஹேஸ்டேக் போட்டனர். அதை, ‘கோ பேக் மோடி’ ஹேஸ்டேக் காணாமல் செய்துவிட்டது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் தொடர்ந்து மோடிக்கு கருப்புக் கொடி காட்டி வருகிறார்.
‘கோ பேக் மோடி’ ஹேஸ்டேக் திமுக ஐடி பிரிவின் வேலை என்று பாஜகவினர் சொல்லிப் பார்த்தனர். போகப் போக, அது ஒட்டுமொத்த தமிழக மக்களின் குரல் என்பது ட்விட்டர் மூலம் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.