அடையாள வெளிநடப்பு ஏன்? ஸ்டாலின் விளக்கம்!

சென்னை:

சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என சபாநாயகர் தனபால் தெரிவித்ததை தொடர்ந்து அவையில் இருந்து அடையாள வெளிநடப்பு செய்த திமுக தலைவர் ஸ்டாலின், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்திதார்.

அப்போது, “விதியை தவறாகச் சுட்டிக்காட்டுகிறார் சபாநாயகர்”  என்று குற்றம் சாட்டினார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில், இன்று கேள்வி  ஜீரோ அவரிடன் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், அதற்கு  சபாநாயகர் அதற்கு அனுமதி மறுத்ததையடுத்து, சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்துப் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டபோது சபாநாயகர் தொடர்ந்து ஆய்வில் இருக்கிறது என்று தெரிவித்து வந்தார். தற்போது கூட்டத்தொடர் தொடங்குவதற்கு நான்கு நாட்கள் முன்பாக இதுகுறித்து சபாநாயகர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இன்று நேரம் இல்லா நேரத்தில் அது என்ன ஆயிற்று எனக் கேள்வி எழுப்பினோம்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வண்ணாரப்பேட்டையில் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி இருக்கிறார்கள்.

இதுகுறித்து கேள்வி எழுப்பினால்,  சபாநாயகர் ஏற்கனவே சட்டமன்ற கூட்டத்தொடரில் நீங்கள் எடுத்து வைத்த கோரிக்கையை நிராகரித்துள்ள நிலையில் அதை மீண்டும் கூட்டத்தொடரில் எடுக்கக்கூடாது எனச் சொல்கிறார்.
ஏற்கெனவே அது விவாதிக்கப்படவில்லை. விவாதிக்கப்பட்டு நிராகரித்து இருந்தால் ஏற்றுக்கொள்வோம். ஆனால் அப்போதே ஆய்வில் இருக்கிறது என்றுதான் சொல்லி இருக்கிறார். சட்டமன்ற விதி 173 ல் இதுகுறித்து தெளிவாக இருக்கிறது. ஆனால்,  சபாநாயகர் அனுமதி மறுத்ததையடுத்து, அதைக் கண்டிக்கும் வகையில்  அடையாள வெளிநடப்புதான் செய்திருக்கிறோம், இது நிரந்தர வெளிநடப்பு அல்ல என்று விளக்கம் அளித்தார்.