தென்மாநிலங்களின் கடும் வறட்சி தேர்தலில் எதிரொலிக்காதது ஏன்?

சென்னை: இந்தியாவின் தென்மாநிலங்கள் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த மக்களவைத் தேர்தலில் அது மிக மிக சிறிய அளவிலேயே எதிரொலித்தது என்பதை கவனிக்க வேண்டியுள்ளது.

இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து இந்தியா 20% மழைப்பொழிவு குறைபாட்டை சந்தித்தது. இதனால், நாட்டின் பல மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவ, குறிப்பாக, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகம்.

இந்த மாநிலங்களின் பல மாவட்டங்கள், தண்ணீர் பஞ்சத்தால் அபாய நிலை அறிவிப்புக்கு உட்பட்டன. கடந்த 2016ம் ஆண்டில் நிலவிய வறட்சியை விட, இந்த ஆண்டு நிலைமை மோசம்.

நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்றுவிட்டதால், போர்வெல் மூலமாக 1000 அடிக்கும் கீழே தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கும் என்ற நிலை நிலவுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரி, திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில், நிலத்தடி நீர் மட்டம் மிகவும் கீழே சென்றுவிட்டது.

தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில், 19 மாவட்டங்கள் மோசமான வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்படுகிறது. நிலைமை இப்படியிருக்கையில், இந்தப் பிரச்சினை சிறியளவில்கூட தேர்தலில் எதிரொலிக்கவில்லை என்றே சமூக ஆர்வலர்கள் கவலைப்படுகின்றனர்.

அரசியல்வாதிகள் அக்கறை காட்டாத சூழலில், இந்தப் பிரச்சினை தொடர்பாக அவர்களின் கவனத்தை, மக்கள் ஈர்த்திருக்க வேண்டும் என்பதே அவர்களின் ஆதங்கம்.