திருமாவளவன் அப்படி பேசியது எதற்காக?

திருச்சி: வரும் 2021ம் ஆண்டில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவில்லாமல், யாரும் தமிழகத்தின் முதலமைச்சராக முடியாது என்று திருமாவளவன் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை எழுப்பியுள்ளது.

திருச்சியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகளின் ‘தேசம் காப்போம்’ மாநாட்டில் பேசிய திருமாவளவன் இதைக் குறிப்பிட்டார்.

அவரின் இந்தக் கருத்து திமுகவிற்காக தெரிவிக்கப்பட்டதுதான் என்று பல அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில், திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி, தலித் நீதிபதிகள் குறித்து கூறிய கருத்துக்கும், திருமாவளவன் கடுமையான எதிர்வினை ஆற்றியிருந்தார்.

2019 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியின்போது, விடுதலை சிறுத்தைகளை, இரண்டு தொகுதிகளிலும் தனிச் சின்னங்களில் போட்டியிட அனுமதிக்காதது, சிறுத்தைகள் போட்டியிட்ட தொகுதிகள் தவிர, பிற தொகுதிகளில் அவர்களைப் பிரச்சாரத்துக்கு அனுமதிக்காதது, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அவர்களின் விருப்பத்திற்கேற்ப பிரச்சாரம் செய்ய அனுமதிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விடுதலை சிறுத்தைகள், திமுகவின் மீது அதிருப்தியாக இருக்கிறார்கள் என்ற கருத்து எழுந்துள்ளது.

ஆனால், வேலூர் மக்களவை இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்த சமயத்திலேயே, விடுதலை சிறுத்தைகளின் வன்னியரசு, திமுகவ‍ை சீண்டும் விதத்தில் பேசினார். ‘சாதிய மற்றும் மதவாத சக்திகளின் கடும் சதித்திட்டங்களையும் மீறி, திருமாவளவன் சிதம்பரத்தில் வெற்றிபெற்றார். ஆனால், வேலூரில் அப்படியான பிரச்சினை எதுவுமில்லாமலேயே, திமுக திணறித்தான் வெற்றிபெற்றது’ என்று கூறியிருந்தார் வன்னியரசு. அவரின் இந்தப் பேச்சு அப்போதே கவனிக்கப்பட்டது.

மேலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை திருமாவளவன் சென்று சந்தித்து வந்தது குறித்து, திமுக தரப்பில் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது, திமுகவை நேரடியாக சீண்டும் விதத்தில், எங்களின் ஆதரவு இல்லாமல் வரும் 2021 தேர்தலில் யாரும் முதலமைச்சராக முடியாது என்று பேசியுள்ளார் திருமாவளவன். அவரின் இந்தப் பேச்சு திமுக வட்டாரத்தை கோபமடையச் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், விடுதலை சிறுத்தைகளின் செயல்பாடுகள் குறித்து சில அரசியல் விமர்சகர்கள் வேறுவிதமாகவும் கருத்து தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கூறுவதாவது; விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ஸ்டாலின் விஷயத்தில் அடிக்கடி சீண்டும் வகையில் செயல்படுகின்றனர். கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில், திருமாவளவன் தேவையில்லாமல் ஆட்சியில் பங்கு வேண்டுமென்றெல்லாம் சம்பந்தமில்லாமல் பேசினார். இதையே அவர், ஜெயலலிதா விஷயத்தில் நிச்சயம் பேசியிருக்க மாட்டார். சிலர் திமுக என்றால் ‍ சீண்டுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

உண்மையில், தேர்தல் களத்தில் விடுதலை சிறுத்தைகளை பெரிதாக நம்பி களமிறங்க முடியாது என்பதே உண்மை. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், வடமாவட்டங்களில் இருந்த தனித்தொகுதிகள் பெரும்பாலானவற்றில் அதிமுக வென்றுவிட, மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்ட திருமாவளவனால் தனது செல்வாக்கு மிகுந்த காட்டுமன்னார் கோயில் தொகுதியில்கூட வெல்ல முடியவில்லை.

கடந்த 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், 2 தொகுதிகள் வேண்டுமென்று திமுக கூட்டணியில் அடம்பிடித்து பெற்று, இரண்டிலுமே தனிச்சின்னத்தில் நின்றது விடுதலைச் சிறுத்தைகள். ஆனால், சிதம்பரத்தில் வெற்றிபெற்ற திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் போன்ற பிரபலங்களை நிறுத்தாமல், யாரோ ஒரு சம்பந்தமில்லாதவரை நிறுத்தி, மிகக்குறைந்த வாக்குகளில் அநியாயமாக ஒரு நாடாளுமன்ற தொகுதியை அதிமுகவுக்கு தாரை வார்த்தார். அவர்களின் கெபாசிட்டி அவ்வளவுதான்.

எனவேதான், இந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளைக் கேட்ட அவர்களிடம், ரவிக்குமார் நிற்பதாக இருந்தால், இன்னொரு தொகுதியை தருகிறோம் என்று திமுக கறாராக கூறிவிட்டது.

மேலும், தலித் வாக்குவங்கி, பெருமளவில் அதிமுக சார்பானதாகவே இருக்கிறது. எனவே, விடுதலை சிறுத்தைகளை பெரியளவில் இறக்கிவிட்டு, திமுகவிற்கு பாரம்பரியமாக அதிகளவில் விழக்கூடிய வன்னியர் வாக்குகளில் தேவையற்ற சேதாரத்தை ஏற்படுத்திக்கொள்ள திமுக விரும்பவில்லை என்றே கருதலாம்.

அதற்காக, திருமாவளவனை திமுக அவமரியாதை செய்கிறது என்றெல்லாம் கூறிவிட முடியாது. 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, திருமாவளவன் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பு செய்தார் திமுக தலைவர் ஸ்டாலின். விடுதலை சிறுத்தைகளை அதிமுக நடத்தியதைவிட, திமுக அதிக மரியாதையுடன்தான் நடத்துகிறது. இதே, ஜெயலலிதாவாக இருந்தால், விடுதலை சிறுத்தைகள் ஒருபோதும் இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கமாட்டார்கள்.

ஸ்டாலின் முதல்வராகி விடக்கூடாது என்ற ஒரேகாரணத்திற்காக உருவாக்கப்பட்டதுதான் மக்கள் நலக்கூட்டணி. திராவிடப் போர்வாள் என்றெல்லாம் புகழப்பட்ட வைகோ, விஜயகாந்த் என்ற ஒருவரை முதல்வர் வேட்பாளராக தமிழகத்தில் பிரச்சாரம் செய்தபோது, அவருடன் சேர்ந்து இயங்கியவர்தான் திருமாவளவன்.

பெரிய கொள்கைப் பிடிப்புள்ளவர் மற்றும் சிந்தனையாளர் என்று கூறப்படும் திருமாவளவன், விஜயகாந்தை முதல்வர் ஆக்குவதற்காக பிரச்சாரம் செய்தது எந்தவகையில் ஏற்கக்கூடியது? நாளை, ரஜினிகாந்த் கட்சித் தொடங்கினால் அந்தக் கூட்டணியில் இணைவார் என்றுகூட பேச்சு கிளம்புகிறது. வரும் 2021 தேர்தலில் எங்கள் ஆதரவின்றி யாரும் முதல்வராக முடியாது என்று பேசியுள்ளது வேறு எதையோ மனதில் வைத்துதான்.

மறுபடியும் 2016ம் ஆண்டைப்போல் இவர்களிடம் ஏதேனும் திட்டம் இருக்கிறதா? என்று தெரியவில்லை. ஆனால், அப்படியான ஒரு முயற்சியில் ஈடுபட்டால், அதனால், விடுதலை சிறுத்தைகள் பெறக்கூடிய அரசியல் லாபம் என்று எதுவுமிருக்கப் போவதில்லை என்கின்றர் அந்த அரசியல் விமர்சகர்கள்.