மீ டூ: வைரமுத்துவை மட்டும் குறிவைப்பது ஏன்?: சீமான் கேள்வி

பாலியல் குற்றச்சாட்டில் வைரமுத்துவை மட்டும் குறிவைப்பது ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘காட்டுப்பய சார் இந்த காளி’ என்ற திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் நலிந்த திரைக்கலைஞர்களுக்கு உதவிகள் வழங்கும் விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான், இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக திரைப்பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாடகி சின்மயி எழுப்பியுள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு சீமான் பதிலளித்தார்.

நிகழ்ச்சியில் சீமான் – அமீர்

அப்போது அவர் தெரிவித்ததாவது:

‘’பெண்களைப் போற்றிக் கொண்டாட வேண்டியது மனிதக்கடமையாகும். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு ஆண்மகனின் பிறவிக்கடன். இன்றைக்கு பெண்களைக் காக்க தனிக்குழு அமைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பது வெட்கக்கேடான விசயம்.

சகோதரி சின்மயி விவகாரத்தில் தம்பி சித்தார்த் போன்றவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். ஸ்ரீரெட்டி என்கிற பெண்மணி, பெயரைக் குறிப்பிட்டு ஒவ்வொருவர் மீதும் பாலியல் புகார் கூறியபோது ஏன் அதுகுறித்து இவர்கள் வாயே திறக்கவில்லை.? சின்மயிக்காகப் பேசுகிற இவர்கள், அந்தப் பெண்ணுக்காக ஏன் பேசவே இல்லை?

ஆசீபா என்கிற 8 வயது மகளை எட்டு பேர் ஒரு வாரத்திற்கு மேலாக கோயில் கருவறையில் வைத்துப் பாலியல் வன்புணர்ச்சி செய்து படுகொலை செய்யப்பட்டபோது இவர்கள் குரல்வளை எழவில்லையே ஏன்? வடநாட்டில் வயதான பெண்மணியை நிர்வாணமாக ஓடவிட்டு எட்டி உதைத்த காணொளியை பார்த்தோமே, அப்போது அவருக்காக ஏன் இவர்கள் குரல்கொடுக்கவே இல்லை? உத்திரபிரதேசத்தில், தனது மகளை வன்புணர்ச்சி செய்துவிட்டார்கள் என்று புகார் கொடுக்கச் சென்ற தந்தையை, பாஜக சட்டமன்ற உறுப்பினர் கொலை செய்தாரே அதற்கு இவர்கள் என்ன எதிர்வினையாற்றினார்கள்? இந்த நிலத்தில் தூத்துக்குடியில் தங்கை புனிதாவை வன்புணர்ச்சி செய்தார்கள். இதுபோன்ற பல பாலியல் வன்புணர்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றனவே. இவை எதற்குமே இவர்கள் பேச முன்வருவதில்லையே ஏன்?

சகோதரி சின்மயி அவர்கள் பிராமணச் சங்கத்தலைவர் ஐயா நாராயணன் மீதும் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அதுகுறித்து எவரும் இங்கும் பேசுவதில்லை. எல்லாக் குரல்களும், விரல்களும் வைரமுத்துவை நோக்கி மட்டுமே நீள்கிறதே.. அதற்குக் காரணமென்ன?

இதனால்தான், நாங்கள் இது குறித்து பேச வேண்டியிருக்கிறது. #MeToo அமைப்பு மூலம் யார் வேண்டுமானாலும் யாரையும் குற்றஞ்சாட்டி, பெயரைக் களங்கப்படுத்திவிடக்கூடிய ஒரு வாய்ப்பு இருக்கிறது.

நாளை குற்றஞ்சாட்டப்பட்டவர் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்கலாம். அதற்குள்ளாக எல்லோரும் இதனை விவாதித்து அவருக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்திவிடுவார்களே!

இவ்விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என சட்ட அறிஞர்கள் தெரிவிக்கிறார் சகோதரி சின்மயி. அப்படியானால், இதனைப் பதிவிடுவதன் மூலம் என்னதான் திக்க நினைக்கிறார்? அவரது உள்நோக்கம் வைரமுத்துவை இழிவுப்படுத்தலாம் என்பதைத்தாண்டி வேறு என்ன?

15  வருடங்களாக வைரமுத்து மீதானக் குற்றஞ்சாட்டை முன்வைக்காததற்கு, அவருக்கிருந்த அரசியல் செல்வாக்குதான் காரணம் என்கிறார் சின்மயி. இப்போது வைரமுத்துவை எதிர்க்கிற அளவுக்கு தனக்கு அரசியல் செல்வாக்கு வந்துவிட்டது என்று கூறவருகிறாரா? முன்பைவிட வைரமுத்துவுக்கு இப்போதுதானே செல்வாக்கு கூடியிருக்கிறது.

வைரமுத்துவை வெறுமனே பாடலாசிரியர், கவிஞர் என்று சுருக்கிவிட முடியாது. அவர் தமிழினத்தின் ஓர்  அடையாளம். அதனைச் சிதைத்து அழித்து இழிவுப்படுத்த திட்டமிடுவதை ஏற்க முடியாது. தமிழர்களுக்கு இருக்கும் பெருமைகள், அடையாளங்களையெல்லாம் திட்டமிட்டு அசிங்கப்படுத்தி ஒன்றுமில்லாமல் ஆக்குவதை இனியும் ஏற்கமுடியாது.

பெண்களைக் காக்க வேண்டும் என்பதிலும், பெண்ணிய உரிமைகளுக்காக நிற்க வேண்டும் என்பதிலும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. விஷால் இதற்காகக் குழு அமைப்பதாகக் கூறுவதை வரவேற்கிறேன்” என்று சீமான் தெரிவித்தார்.