மதுரை: தொல்லியல்துறை சார்ந்தபடிப்பில் தமிழை புறக்கணித்தது ஏன்? என்பது குறித்து தொல்லியல்துறை பதில் அளிக்க உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

மத்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில், உத்தரப் பிரதேச மாநிலம் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம்  சார்பில்,  தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப்  பட்டயப் படிப்புக்கான  ஆணை வெளியிடப்பட்டது. அதில்,  வரலாறு. தொல்லியல்துறை, மானிடவியல் மற்றும் செம்மொழிகளான சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம் மற்றும் அரபு மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த அறிவிப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. தொல்லியல் பட்டயப்படிப்பு கல்வி தகுதியில் தமிழ் மொழியை சேர்க்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதினார்.
இதையடுத்து,  மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்பில் தமிழ் மொழிக்கு அனுமதி மத்திய அரசின் மத்திய தொல்லியல்துறை உத்தரவிட்டது.  அந்த உத்தரவில், தமிழ், கன்னடம், மலையாளம், ஒடிஷா உள்ளிட்ட 10 மொழிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில்   மதுரையை  சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் தொடர்ந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது,  ,தொல்லியல் துறை பட்டயப் படிப்பு அறிவிப்பாணையில் தமிழ் மொழியைத் தவிர்த்தது ஏன் ?  என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், எதிர்ப்பு குரல்கள் எழுந்தால் தான் தமிழ்மொழி சேர்க்கப்படுமா என்று கேட்டதுடன், இதுதொடர்பாக தொல்லியல்துறை விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 28 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.