ரபேல் போர் விமான விலை பல மடங்கு உயர்த்தப்பட்டது ஏன்?….ப.சிதம்பரம் கேள்வி

கொல்கத்தா:

ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். ஆனால் இதை ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘ ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைகள் ஏன் தவிர்க்கப்பட்டன? ஒப்பந்த பேச்சுவார்த்தை குழு மற்றும் விலை பேச்சுவார்த்தை குழு ஆகியவை ஏன் இருளில் மறைக்கப்பட்டன?. பாதுகாப்பு பற்றிய அமைச்சரவை குழுவும் நம்பிக்கைக்கு உரிய ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ரபேல் போர் விமானம் ஒன்றை 526 கோடி ரூபாய் செலவில் ல் வாங்கியது. பாஜக தலைமையிலான கூட்டணி அரசு ரபேல் போர் விமானம் ஒன்றை 1,670 கோடி ரூபாய் அளவில் வாங்கியுள்ளது. இது உண்மை என்றால் போர் விமானம் ஒன்றின் விலை 3 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது ஏன்? என்பது குறித்து பிரதமர் மோடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்றார்.