குழந்தைகளின் முதுகில் எதற்காக இன்னும் அதிக சுமை: உச்சநீதிமன்றம் கேள்வி

--

புதுடெல்லி: நாடெங்கிலும் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒரேவிதமான கல்வித் திட்டம் கொண்டுவருவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்வது குறித்து தொடரப்பட்ட ஒரு பொதுநல வழக்கை, தனது அதிகாரத்திற்கு உட்பட்டது அல்ல என்று கூறி, விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டது உச்சநீதிமன்றம். மேலும், குழந்தைகளின் முதுகில் எதற்காக இன்னும் அதிக சுமையை ஏற்ற விரும்புகிறீர்கள்? என்றும் கேட்டுள்ளது நீதிமன்றம்.

நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, பாரதீய ஜனதாவைச் சேர்ந்த அஷ்வினி உபாத்யாயா என்பவர் தாக்கல் செய்த மனுவை வீடியா-இணைப்பு மூலம் விசாரித்தது. அப்போது, கல்வி வாரியங்களை ஒன்றாக இணைப்பதை நீதிமன்றங்கள் முடிவுசெய்ய முடியாது என்றுகூறி, மனுவை விசாரிக்க மறுத்துவிட்டது.

நீதிமன்றம் கூறியுள்ளதாவது, “இந்த ரிட் மனு கல்விக் கொள்கை தொடர்பான பிரச்சினையை எழுப்புகிறது. ஆனால், அரசமைப்பு சட்டப்பிரிவு 32இன்படி, கல்விக்கொள்கை தொடர்பாக தேசிய கல்விக் கவுன்சில் மற்றும் தேசிய கல்வி கமிஷன் ஆகியவற்றுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

இந்த விஷயம் நிபுணர்களின் முடிவுக்கு உட்பட்டது. பள்ளிப் பாடத்திட்டமானது, அரசியலமைப்பின்கீழ், அறிவு உரிமைகள், கடமைகள் மற்றும் நிர்வாகம் தொடர்பான பாடங்களைக் கொண்டுள்ளது.

நமது பாடத்திட்டமானது, நம் குழந்தைகளின் முதுகை, புத்தகச் சுமையினால் ஏற்கனவே வளைக்கிறது. எனவே, இன்னும் எதற்காக நீங்கள் அவர்களின்மேல் அதிக சுமைகளை ஏற்றுவதற்கு விரும்புகிறீர்கள்” என்றுள்ளது உச்சநீதிமன்றம்.