சென்னை: சென்னையில் உள்ள 32 மெட்ரோ ரயில்நிலையங்களிலும் விரைவில் வைஃபை வசதி செய்யப்பட இருப்பதாக மெட்ரா  ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 2021 ஏப்ரல் மாதத்திற்குள் வைஃபை வசதி அமலுக்கு வந்துவிடும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் கடந்த மாதம் முதல் மீண்டும் தொடங்கி உள்ளன. சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் சேவையின் முதல் வழித்தடத்திலும் ரயில்கள் விமான நிலையம்-வண்ணாரப்பேட்டை வரையும், 2வது வழித்தடத்தில்,, சென்னை சென்ட்ரல்-பரங்கிமலை வரை இயக்கப்பட்டு வருகின்றன.
பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில்கள் செல்வதால், போன், லேப்டாப் போன்றவற்றிற்கு சிக்னல் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.  இதனால், மொபைல் சேவை, இணைய சேவை இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றதால், அனைத்து ரயில் நிலையங்களிலும் வைஃபை சேவையை அமல்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி,  அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் 32 மெட்ரோ ரயில் நிலையங்களில் வை ஃபை இணைப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலமாக, பயணிகள் இலவசமாக இணையவழி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். மெட்ரோ ரயிலின் உயா்த்தப்பட்ட பாதை மற்றும் பூமிக்கடியில் சுரங்கப்பாதைகளில் சிக்னல்கள் வலுவாக இருந்தால், பயணிகள் ரயிலில் பயணிக்கும்போதும் இணையத்தைப் பயன்படுத்தமுடியும் என்றும், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்த உள்ளனர்.