ராஜபக்சேவை பிரதமராக நியமித்தது ஏன்? -அதிபர் சிறிசேனா விளக்கம்

நாட்டின் அரசியல், பொருளாதாரச் சூழல் மற்றும் என்னை கொல்ல நடந்த சதியை நினைத்து ராஜபக்சேவை பிரதமராக நியமித்தேன் என இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார். இதை தவிர வேறு மாற்றுவழி தனக்கு தோன்றவில்லை எனவும் சிறிசேனா விளக்கம் கொடுத்துள்ளார்.

இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Maithripala

தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்தது செல்லாது என்றும், நாட்டின் பிரதமராக நான் தொடர்ந்து நீடிக்கிறேன் எனவும் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். தன்னை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து, நவம்பர் 16-ம் தேதிவரை பாராளுமன்றத்தை முடக்கம் செய்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா நேற்று பிற்பகல் உத்தரவு பிறப்பித்தார்.

இதற்கிடையே, சபாநாயகர் கரு ஜெயசூரியா இன்று மைத்ரிபால சிறிசேனாவுக்கு அனுப்பிய கடிதத்தில், நாட்டில் ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் பாதுகாக்க ரணில் விக்ரமசிங்கேவின் தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும். பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கேவின் சிறப்பு உரிமைகள் தொடர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கேவை நீக்கியது ஏன் என்பது குறித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். விக்கிரமசிங்கேவை பதவி நீக்கம் செய்த பின்னர் நாட்டு மக்களிடையே முதல்முறையாக உரையாற்றிய அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, ” சாமான்ய மக்களின் எண்ணங்களை பற்றி கவலைப்படாமல் தனக்கு வேண்டியவர்கள், தன்னை சுற்றி இருப்பவர்கள் மட்டும் லாபம் அடையும் வகையில் ரணில் விக்ரமசிங்கே செயல்பட்டு வருகிறார்.

நல்லாட்சி என்னும் தத்துவத்தையே முழுமையாக அழித்துவிட்ட விக்ரமசிங்கேவின் ஆட்சியில் ஊழலும், வீண் செலவுகளும் பெருகி விட்டது. கூட்டு பொறுப்பு என்னும் அரசின் செயல்பாட்டை கேலிக்கூத்து ஆக்கும் வகையில் அனைத்து முடிவுகளையும் அவர் தன்னிச்சையாக எடுக்க தொடங்கி விட்டார்.

அவருக்கும் எனக்குமான கொள்கை முரண்பாடுகள் நாளுக்கு நாள் மிகப்பெரியதாக விரிவடைந்து கொண்டே போனது. இந்த கொள்கை முரண்பாடுகளும், எங்கள் இருவருக்கரும் இடையிலான கலாச்சார முரண்பாடுகளும் நமது நாட்டின் இன்றைய அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு காரணமாக அமைந்து விட்டது.

மேலும், என்னையும் முன்னாள் மந்திரி கோத்தபய ராஜபக்சேவையும் கொல்ல நடந்த சதித்திட்டம் தொடர்பான தகவலின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் விக்கிரமசிங்கே தவறி விட்டார் “ என்று மைத்ரிபாலா சிறிசேனா அடுக்கடுக்காக ரணில் விக்ரமசிங்கே மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டும், நாட்டின் அரசியல், பொருளாதாரச் சூழலை கருதியும், ராஜபக்சேவை பிரதமராக நியமித்தேன். அதனை தவிர வேறு மாற்றுவழி எனக்கு தோன்றவில்லை என இலங்கை மக்களுக்கு சிறிசேனா விளக்கம் அளித்துள்ளார்.