சென்னை:
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று பிற்பகல்  முதல் பரவலாக மழை  மழை பெய்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ள நிலையில், தற்போது பெய்து வரும் மழை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில், 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று மிதமான மழையும், 7 மாவட் டங்களில், இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக கூறியது.
தென்தமிழகம், உள்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில், பெரும் பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், சென்னை உள்பட சில மாவட்டங்களில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பிற்பகல் முதல் நல்ல மழை பெய்து வந்தது. தொடர்ந்து இரவிலும் சில இடங்களில் மழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதலே சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  மீண்டும் இடியுடன் கூடிய பரவலான மழை பெய்து வருகிறது. சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மெதுவாக ஊர்ந்து சென்றனர்.
ஜெமினி மேம்பாலம், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு, மத்திய கைலாஷ், மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, எழும்பூர், பெரம்பூர், நுங்கம்பாக்கம், பெரம்பூர், மாதவரம் உள்பட  பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
புறநகர் பகுதிகளான திருப்போரூர், சிறுசேரி, கேளம்பாக்கம், திருக்கழுக்குன்றம், கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள பாலவாக்கம், நீலாங்கரை, கானத்தூர், கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திலும் அதிகாலை முதல் இடைவிடாமல் மிதமான மழை பெய்து வருகிறது.
அதிகபட்சமாக அம்பத்தூரில் 7.1 செ.மீ மழையும், மாம்பலத்தில் 4.6 செ.மீ மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
மேலும்,  வேலூர், காட்பாடி சுற்றுவட்டார பகுதிகள், அரியலூர்மாவட்டம், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் விடிய விடிய இடைவிடாமல் கனமழை பெய்தது.
மேலும் கோவை, நீலகிரி, கொடைக்கானல், திருச்சி உள்பட பல மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது.