Random image

தூத்துக்குடி கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் தற்கொலை: பாலியல் தொல்லை காரணமா?

தூத்துக்குடி:

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயர் அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக அந்த பெண் ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் பரவி வருகிறது.

தற்கொலை செய்துகொண்ட பெண், தனது முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி, சுவாசிக்க முடியாதபடி தற்கொலை முடிவை நாடியுள்ளார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயர் அதிகாரியின் பாலியல் தொல்லை காரணமாக அவர் தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் பகுதியில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்தவர் தமிழ்ச்செல்வி. இவரது கணவர் செந்தில்குமார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இந்த நிலையில் தமிழ்ச்செல்வி தனியாக வசித்து வந்தார்.

கடந்த திங்கட்கிழமை பணி முடிந்து வந்த தமிழ்ச்செல்வி அதன்பிறகு வீட்டை விட்டு வெளியே வரவில்லை.  அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டின் கதவை தட்டியும், அவரது வீடு திறக்கப்படவில்லை. இதனால் உடனடியாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர்,  கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையறையில், முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி தமிழ்ச்செல்வி தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், விதவையான தமிழ்ச்செல்வியை உயரதிகாரி ஒருவர் தொடர்ந்து பாலியல்  தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏற்கனவே ஒருமுறை தமிழ்ச்செல்வி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட நிலையில் தற்போது தற்கொலை முடிவை நாடியுள்ளார்.

தமிழ்செல்வி மரணத்துக்கு நீதி வேண்டும் என்றும்,  உயர் அதிகாரியின் தொல்லையால் விதவை பெண் ஊழியர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.